அகதிகளை மட்டுமே அனுமதிக்கும் முடியும்!

Saturday October 06, 2018

2019ல் 30,000 அகதிகளை மட்டுமே அனுமதிக்கும் முடியும்: அதிர்ச்சியளிக்கும் அமெரிக்காவின் முடிவு.

 வரும் 2019ம் ஆண்டில் அமெரிக்காவுக்குள் 30,000 அகதிகளை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவினை எடுத்திருக்கிறது ஜனாதிபதி டொனலட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம். இது தொடர்பான உறுதியேற்பில் கடந்த அக்டோபர் 4 அன்று டிரம்ப் கையெழுத்திட்டு இருப்பதன் மூலம் இது உறுதியாகியுள்ளது. 

“மனிதாபிமான அடிப்படையில் அல்லது தேசிய நலன் என்ற ரீதியில் 2019 நிதி ஆண்டில் 30,000 அகதிகள் வரை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அந்த உறுதியேற்பில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் 30 யுடன் நிறைவடைந்த 2018 நிதி ஆண்டில் 45,000 அகதிகளை எடுத்துக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டில் 22,491 அகதிகள் மட்டுமே அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுவே 2017ல் 53, 716 அகதிகளும், 2016ல் 84,994 அகதிகளும் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை 1977 ஆம் ஆண்டின் கணக்கோடு தான் ஒப்பிடக்கூடியதாக இருக்கின்றது. 

முன்னதாக, கடந்த 2017ல் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமான் உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை என்ற முடிவின் மூலம், அந்நாட்டிலிருந்து தஞ்சம் கோருபவர்களுக்கு/ அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை டொனல்ட் டிரம்ப் தொடங்கி வைத்தார்.

 இது படிப்படியாக அகதிகளை அனுமதிக்கும் விவகாரத்திலும் எதிரொலிக்க தொடங்கியது. இந்த நிலையில், 2016ல் பாரக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்திலும் இத்தடை எதிரொலித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியேற்ற வேண்டும். ஆனால், மீள்குடியேற்றுவதற்கான பணி தொடங்கிய பொழுது டிரம்ப் தடை விதித்த முஸ்லீம் நாடுகளிலிருந்து எந்த அகதிகளையும் அமெரிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

தற்போதைய உறுதியேற்பின் படி, 

ஆப்பிரிக்க நாடுகள்: 11,000 அகதிகள்

கிழக்கு ஆசியா: 4,000 அகதிகள்

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா: 3,000 அகதிகள்

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரேபியன்: 3,000 அகதிகள்

கிழக்கு ஆசியா அருகே/ தெற்கு ஆசியா: 9,000 அகதிகள்

இக்கணக்குகளின் அடிப்படையில் பகுதிவாரியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.  அமெரிக்காவுக்குள் அகதிகளை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று வீழ்ச்சி, மனித உரிமைத் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கணக்கின் படி, 68.5 மில்லியனாக உள்ள உலக அகதிகள் எண்ணிக்கையினால் பல்வேறு உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நெருக்கடி இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான சூழலோடு ஒப்பிடப்படும் நேரத்தில் அமெரிக்காவின் இம்முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகின்றது.