அகதிகள் நெருக்கடி குறித்து சர்வதேச அளவிலான ஒரு நடவடிக்கை வேண்டும்: - ஐ.நா

செவ்வாய் மே 17, 2016

உலகளவில் தோன்றியிருக்கும் அகதிகள் நெருக்கடி குறித்து சர்வதேச அளவிலான ஒரு நடவடிக்கை வேண்டும் என்ற தனது கோரிக்கையை, ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையர், பிலிப்போ க்ரண்டி (Filippo Grandi ) மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.இந்தப் பொறுப்பு, பல லட்சக்கணக்கான அகதிகளை அனுமதித்திருக்கும் ஒரு சில நாடுகள் மற்றும் அந்த அகதிகள் நிவாரணத்துக்கு நிதி வழங்கும் ஏழு அல்லது எட்டு நாடுகளுக்கும் இடையே மட்டுமல்லாமல் , மேலும் பரவலாக மற்ற நாடுகளாலும், பகிர்ந்துகொள்ளப்படவேண்டும் என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் கடந்த வருடத்தில் உலகளவில் சுமார் 20 மில்லியன் அகதிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வேறு ஒரு புதிய நாட்டில் குடியேற அனுமதிக்கப்பட்டனர், ஆகையால் மீள் குடியேற்றம் பற்றி நாடுகள் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும், நாடுகளின் எல்லை கட்டுப்பாடுகளால் மக்களை தடுத்து நிறுத்தமுடியும் என நினைப்பது சரியான அணுகுமுறை இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மானுட இடம்பெயர்வு என்பது தற்காலத்தில் அத்தகைய கட்டுப்பாடுகளை விட பலமானதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.