அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்!

Monday December 04, 2017

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி  போட்டியின்றி ஒருமனதாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அக்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இதற்கேற்ப, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுலை தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த மாதம் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தனது வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்தார். மூத்த தலைவர்கள் கமல்நாத், ஷீலா தீக்‌ஷித், மோதிலால் வோரா, தருண் கோகோ ஆகியோர் அவரை முன்மொழிந்தனர்.

அதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லங்களுக்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றார்.

தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 16-ம் திகதி நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ள நிலையில், இன்று மாலை வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நாளை வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து, போட்டியின்றி ஒருமனதாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ராகுல் காந்தி விரைவில் சோனியாவிடம் இருந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தெரிகிறது.

காங்கிரசின் வருங்கால தலைவர் ராகுல் காந்திக்கு அவரது மைத்துனரும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.