அதிமுக அனைத்து தேர்தல்களிலும் டெபாசிட் இழப்பது உறுதி!

Thursday November 08, 2018

இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.

கொடைக்கானலில் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ரெட் அலர்ட் காரணம் கூறி தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 20 தொகுதிகளும் காலியாக உள்ளன.


அ.ம.மு.க. சார்பில் அத்தொகுதிகளில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இதனையும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் காரணம் தேடி தேர்தலை நிறுத்த முயன்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பெற 8 தொகுதிகளில் வென்றாலே போதும் என பேசுகின்றனர்.

தமிழகத்தில் 234 தொகுகளிலும் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. பயந்து வருகிறது.

கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரும் மக்களவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆதரவு குறைந்துள்ளது.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் ஒரு போதும் பிடிக்க முடியாது. சர்கார் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.