அனுமார் வாலாகும் ஐ.நா. தீர்மானங்கள் - ‘கலாநிதி’ சேரமான்

March 24, 2017

உரிமைக் குரல் மறுக்கப்பட்ட இனங்களில் ஒன்றாகத் தமிழினமும் திகழ்கின்றது என்பதை மீண்டுமொரு தடவை பறைசாற்றும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு இரண்டாண்டு கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையூடாக மேற்குலகம் வழங்கியிருக்கின்றது. இப்பத்தி வெளிவரும் பொழுது சிறீலங்கா அரசாங்கத்திற்குச் சாதகமான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும். கடந்த 2015 புரட்டாசி மாதம் நடைபெற்றது போன்று இம்முறையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு சிறீலங்கா அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருக்கும். இவையயல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைதான்.

ஆக, காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவுகள் மீண்டு வருவார்கள் என்று கண்ணீரூடன் நம்பியிருந்தவர்களுக்கும், படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை உலக சமூகம் வழங்கும் என்று கடந்த எட்டாண்டுகளாக பலத்த எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்களுக்கும் மீண்டும் ஏமாற்றத்தையே சன்மானமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், மேற்குலகமும் வழங்கியிருக்கின்றன.

சரி, இனி நாம் செய்யலாம்?

இரண்டாண்டுகளின் பின்னர் மீண்டும் 2019ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூடும் பொழுது எல்லோரும் ஜெனீவாவிற்குப் படையயடுத்துச் செல்லப் போகின்றோமா? அப்போதாவது தமிழர்களுக்கு நீதி கிட்டும் என்று நாம் எதிர்பார்க்கலாமா?

திட்டமிட்ட படி இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூடும். அதற்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டு காலப் பகுதியில் நடைபெறப் போகும் பேரவையின் ஐந்து அமர்வுகளிலும் இடையிடையே தமிழர் விவகாரம் பேசப்படும். ஆனால் பேச்சைத் தவிர எதுவும் நடக்காது. இரண்டு ஆண்டுகள் நெருங்கும் பொழுது, எம்மவர்கள் ஐ.நா. நோக்கிப் பக்திப் பரவசமெடுத்து நிற்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு அனந்த சயனத்தில் மூழ்கும் தமிழ் அமைப்புக்கள் திடீரென திருப்பள்ளியயழுச்சி கொள்ளும். பிறீவ் கேஸ்கள், லப் ரொப்கள், ஐ-பாட்கள் சகிதம் எம்மவர்கள் ஜெனீவா நோக்கிப் படையயடுக்கத் தயாராவார்கள். மறுபுறத்தில் கொழும்பில் உள்ள சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சும், வோசிங்கடன், இலண்டன், பாரிஸ், பிறசெல்ஸ், ஜெனீவா ஆகிய மேலைத்தேய நகரங்களில் உள்ள அதன் தூதரகங்களும் முழு மூச்சுடன் ஆவணங்களையும், அறிக்கைளையும் தயாரிப்பதிலும், மேலைத்தேய ஆட்சியாளர்களை வால்பிடிப்பதிலும் தமது நேரத்தை செலவளிக்கும். திடீரென எங்கிருந்தோ ஓர் அசரீரி ஒலிக்கும்: ‘சிறீலங்கா அரசாங்கத்திற்கு இன்னும் ஓராண்டுகால அவகாசம் அளிக்கப்படுகின்றது’ என்பதுதான் அது. அதைக் கேட்டதும்தான் தாமதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டத்து இளவரசர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் புளகாங்கிதம் அடைவார். அசரீரியை வரவேற்று எல்லோரையும் முந்திக் கொண்டு அறிக்கை விடுவார். இது நடந்து ஓரிரு வாரங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூடும். உடனேயே தனது பரிவாரங்களுடன் அங்கு தரிசனமளிக்கும் மங்கள சமரவீர, லங்காபுரியில் வாழும்இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சமரசத்தையும் ஏற்படுத்துவதற்கான தமது அரசாங்கத்தின் முயற்சி வெற்றிப் பாதையில் பயணிப்பதாக சிவபுராணம் பாடுவார். ‘காணிகளை விடுவித்து விட்டோம், காணாமல் போனோருக்கான செயலகத்திற்கான பணியாளர்களை நியமித்து விட்டோம்.

இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பொறிமுறையை அமைப்பதற்கான எமது ஆராய்ச்சிகளில் கணிசமான முன்னேற்றத்தை கண்டு விட்டோம். இது பற்றி ஆழமாக ஆராய்வதற்கு என்று அமைக்கப்பட்ட எமது சட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்னும் சில மாதங்களில் வெளிவந்துவிடும். அது வெளிவந்ததும் விசாரணைப் பொறிமுறையை அமைக்கும் முடிவை நாம் எடுப்போம்’ என்றெல்லாம் அடுக்கடுக்காகப் புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்.  

மறுபுறத்தில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கை புதிய மொந்தையில் பழைய கள் என்ற கதையாக வெளிவரும். தமது செயலகத்துடன் சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்து ஒத்துழைப்பதையிட்டுத் தான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாக அவர் கூறுவார். அதேநேரத்தில் விசாரணைப் பொறிமுறையை அமைப்பதில் தொடரும் தாமதம் தனக்கு ஆழ்ந்த கரிசனையை அளிப்பதாகவும் அவர் கண்ணீர் விடுவார். எப்படியானாலும் காலம் தாழ்த்தாது விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் எடுத்தால் மட்டுமே தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்று கூறுவார்.

பிறகென்ன? ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற கதையாக மீண்டுமொரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும். லங்காபுரியில் தங்குதடையின்றி மேலைத்தேய முதலாளிகள்  கடைவிரிப்பதற்கு வழிவகை செய்யும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைளை எந்த விதமான விட்டுக் கொடுப்புமின்றிப் பின்பற்றும் மைத்திரி‡ரணில் அரசாங்கத்திற்கான சன்மானமாக இன்னுமொரு ஆண்டுகால அவகாசம் அளிக்கும் தீர்மானத்தை அமெரிக்காவோ, பிரித்தானியாவோ, அல்லது ஏதாவதொரு ஐரோப்பிய நாடோ முன்மொழியும்.

நீதிக்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கும் உறவுகளுக்கு மீண்டும் ஏமாற்றம்தான் மிஞ்சும். இலவு காத்த கிளி ஆசுவாசம் கொள்வதற்கு வெற்றுப் பஞ்சாவது மிஞ்சும். ஆனால் எம்மவர்களுக்கு? இங்கு இன்னுமொரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறீலங்காவின் ஆட்சியாளர்களைத் தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கான ஆயுதமாக மட்டுமே இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களை மேற்குலகம் பயன்படுத்துகின்றதே தவிர, தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது எப்பொழுதுமே மேற்குலகைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சமானதுதான்.

ஈழத்தீவில் மேற்குலக முதலாளிகள் கடைவிரிப்பதற்குத் தடையாக இருப்பதாகக் கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழ் மக்களின் ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் மகிந்த ராஜபக்சவின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு 2006ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்குலகம் ஆசீர்வாதம் அளித்தது. ‘மகிந்த சிந்தனாவ’ என்ற மகுடத்துடன் அரசுசார் பொருண்மியக் கொள்கைகளை இறுகப் பற்றிப் பிடித்தவாறு 2005ஆம் ஆண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறிய மகிந்தரை ஒரு பொழுதும் தமது நம்பிக்கை நட்சத்திரமாக மேற்குலகம் கருதியதில்லை. அதேநேரத்தில் மரபுவழிச் சேனை என்ற நிலையில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட தாழ்நிலை யுத்தத்தை மட்டும் முன்னெடுக்கக்கூடிய ஒரு குழுவாகத் தமிழீழ விடுதலைப் புலிகளை சுருங்க வைப்பதற்கு அவரைத் தவிர வேறு எந்தத் தெரிவுகளும் அன்று மேற்குலகிற்கு இருக்கவில்லை. அதனாலேயே அன்று மகிந்தரின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு மேற்குலகம் ஆசி வழங்கியது.

யுத்தத்தில் பலவீனப்படுத்தப்பட்டாலும், குறைந்தபட்சம் கெரில்லா பாணியிலான ஆயுதப் போராட்டத்தையாவது தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுப்பார்கள் என்று மேற்குலகம் எதிர்பார்த்தது. அதனை மகிந்தருக்கு எதிரான துருப்புச் சீட்டாகவும், மகிந்தர் பெறக்கூடிய அதிகபட்ச யுத்த வெற்றியைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான துருப்புச் சீட்டாகவும் பயன்படுத்தி இரு தரப்பினரையும் பணிய வைக்கலாம் என்று அப்பொழுது மேற்குலகம் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு.

மேற்குலகின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் மிஞ்சி யுத்தத்தில் மகிந்தர் வெற்றிவாகை சூடினார். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய போராட்டமும் இடைநிறுத்தம் பெற்றது. இதனை மேற்குலகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

லங்காபுரியின் சிம்மாசனத்தில் இருந்து மகிந்தரைத் தூக்கியயறிவதற்கு சரத் பொன்சேகாவைக் கருவியாகக் கையாண்டு 2010 தை மாதம் எடுக்கப்பட்ட முயற்சிகள் மண்கவ்விப் போக, மகிந்தரை வீழ்த்துவதற்கான ஆயுதமாக இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களை மேற்குலகம் கையிலெடுத்தது. சாம, பேத, தான, தண்டம் என்று மகிந்தரை மசிய வைப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் கானல்நீராக 2012 பங்குனி மாதம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூடிய பொழுது அதனை மேற்குலகம் குருசேத்திரமாகியது. போர்க்குற்றம் என்றும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் என்றும் அடுத்தடுத்து 2012ஆம், 2013ஆம் ஆண்டுகளின் பங்குனி மாதங்களில் இரண்டு தீர்மானங்களை மேற்குலகம் நிறைவேற்றியது.

தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கப் போவதாக சூளுரைத்து 2013ஆம் ஆண்டின் இறுதியில் யாழ்ப்பாணம் விரைந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், பன்னாட்டு விசாரணை பற்றிய எச்சரிக்கையை மகிந்தருக்கு விடுத்தார். அதற்கும் மகிந்தர் மசியாது போக, 2014ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் செயலகத்தின் தலைமையிலான பன்னாட்டு விசாரணை என்ற ஆயுதம் மகிந்தரை நோக்கி ஏவிவிடப்பட்டது. இவ்விசாரணை அடுத்த கட்டமாக மகிந்தரைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில், அல்லது பன்னாட்டு சிறப்பு நடுவர் மன்றம் ஒன்றில் முன்னிறுத்துவதற்கு வழிகோலும் என்று தமிழர்கள் நம்பியிருந்த பொழுது லங்காபுரியின் ஆட்சிக்கட்டில் இருந்து மகிந்தர் தூக்கியயறியப்பட்டார்.

மைத்திரி-ரணில் தம்பதிகள் ஆட்சிபீடமேறினார்கள். அத்தோடு மேற்குலகமும் சாந்தமடைந்தது. திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளில் ஆழமான பற்றுணர்வைக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் மைத்திரி-ரணில் அரசாங்கம்,  அவ்விடயத்தில் உண்மையாகத்தான் நடந்து கொள்கின்றதா? என்ற சந்தேகம் மேற்குலகிற்கு இருக்கத்தான் செய்கின்றது. அதனால் அடிக்கடி பொறுப்புக்கூறல் பற்றியும், நல்லிணக்கம் பற்றியும் மேற்குலகம் பேசுகின்றது. பன்னாட்டுக் குற்றங்கள் பற்றிய விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு விசாரணையாளர்களும், வழக்குத்தொடுநர்களும், நீதிபதிகளும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது.

இன்றைய சூழலில் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளும் எண்ணம் மேற்குலகிற்கு இல்லை. அதேநேரத்தில் பன்னாட்டுக் குற்றங்கள் என்ற கயிற்றை விட்டால், மைத்திரி - ரணில் அரசாங்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றும் மேற்குலகம் அஞ்சுகின்றது.

இரண்டு ஆண்டுகளின் பின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஈழப்பிரச்சினை பேசுபொருளாகும் பொழுது, இப்போதிருப்பதைப் போல் தொடர்ந்தும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை மைத்திரி-ரணில் அரசாங்கம் பின்பற்றினால், இன்னுமொரு ஆண்டுகால அவகாசத்தை அதற்கு மேற்குலகம் வழங்கும். அந்த ஓராண்டு முடிவதற்குள் லங்காபுரியில் மீண்டும் அதிபர் தேர்தல் நிகழும். அதில் மீண்டும் மைத்திரியோ, அன்றி மேற்குலகின் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு இசைவான இன்னுமொருவரோ வெற்றிபெற்றால், ஆண்டுதோறும் ஐ.நா.வில் சிறீலங்காவிற்கு கால அவகாசங்கள்தான்.

இனிவரப் போகும் அதிபர் தேர்தலில் மகிந்தரால் போட்டியிட முடியாது. அதற்கு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆப்பு வைத்து விட்டது. அதேநேரத்தில் எதிர்காலத்தில் தேர்தலில் களமிறங்கும் எண்ணம் தனக்கு உண்டு என்பதை மகிந்தரின் அன்புச் சகோதரர் கோத்தபாய பகிரங்கமாக்கியுள்ளார்.

தற்பொழுது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கியிருக்கும் இரண்டாண்டு கால அவகாசம் நிறைவடையும் பொழுது லங்காபுரியில் அதிபர் தேர்தல் பற்றிய முணுமுணுப்புக்கள் தொடங்கி விடும். கட்சி தாவல்களும் மெல்ல மெல்லத் தளிர்விடத் தொடங்கும். அப்பொழுது சிங்கள வாக்காளர்களை எச்சரிக்கை செய்வதற்காக மைத்திரி‡ரணில் அரசாங்கத்திற்கான கால அவகாசத்தை ஓராண்டாக மேற்குலகம் சுருக்கிக் கொள்ளும். அதனைப் புரிந்து கொண்டு 2020ஆம் ஆண்டு தை மாதம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் மைத்திரியையோ, அன்றி மைத்திரி‡ரணில் அணியைச் சேர்ந்த ஒருவரையோ சிங்கள வாக்காளர்கள் தெரிவு செய்தால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் அனுமார் வாலாகத் தொடர்ந்து நீளும். அனுமார் வாலுக்குத் தீவைப்பதாக எண்ணி மகிந்தர் அணியைச் சேர்ந்த ஒருவரை சிங்கள வாக்காளர்கள் ஆட்சிபீடத்தில் அமர்த்தினால் மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை குருசேத்திர களமாகும். லங்காபுரி மெல்ல மெல்லத் தீப்பற்றியயரியும்.

ஆக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களும், கால அவகாசங்களும் அனுமார் வாலாக நீண்டு கொண்டு செல்லப் போகின்றனவா? அல்லது லங்காபுரியை எரிக்கப் போகின்றனவா? என்பதை 2020ஆம் ஆண்டில் சிங்கள வாக்காளர்கள்தான் தீர்மானிக்கப் போகின்றார்கள். அதுவரை, ஏன் சிலவேளை அதற்குப் பின்னரும், தமிழர்களுக்கு ஜெனீவாவில் மிஞ்சப் போவது ஏமாற்றம் மட்டும்தான்.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
சனி April 21, 2018

புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...

ஞாயிறு April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.