அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி!

Monday December 11, 2017

 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை இன்று திருமணம் செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் காதல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் திருமணம் தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன.

இதற்கிடையே இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர் முடிந்தவுடன் இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வருகிற 27-ந்தேதி நள்ளிரவு இந்தியாவில் இருந்து புறப்படுகிறது.

டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது. அதில் இருந்து கோலிக்கு சுமார் 20 நாட்கள் வரை ஓய்வு உள்ளது. இந்த நேரத்தில் அவருக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பேசப்பட்டது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இத்தாலி நாட்டின் டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற போர்கோ பினோசிட்டோ ரிசார்ட்டில் விராட் கோலி-அனுஷ்கா திருமணம் இன்று நடைபெற்றது. 100-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள சின்னஞ்சிறிய பிபியானோ கிராமத்தில் இந்த ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்து இந்தியா வரும் விராட்-அனுஷ்கா தம்பதி, மும்பையில் விரைவில் ஆடம்பரமாக வரவேற்பு விழாவை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.