அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்!

Saturday March 10, 2018

காவிரி பிரச்சினைக்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்-அமைச்சருக்கு, வைகோ வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரமான காவிரி பிரச்சினையில், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு முரண்பாடாக  உச்ச  நீதிமன்ற    தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாட்டுக்கு தண்ணீரை குறைப்பதற்காக, பெங்களூரு குடிநீர் தேவையை சுட்டிக்காட்டியது மட்டும் அல்லாமல், தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கின்றது என, இந்த வழக்குக்கு தொடர்பு இல்லாத கருத்தை குறிப்பிட்டு இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், கர்நாடக மாநிலம்,   உச்ச  நீதிமன்ற  தீர்ப்பை சுட்டிக்காட்டி, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் இல்லை; ஒரு திட்டம் வகுக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறது என தெரிவித்து உள்ளது. இப்படி, கர்நாடகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத்தான் சுப்ரீம்   உச்ச  நீதிமன்ற   தீர்ப்பு வழி செய்து இருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்களையும் அழைத்துக்கொண்டு,  பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நாம் கோரி வரும் நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக மத்திய அரசு அறிவித்து விட்டது. மேலும் மேகதாது, ராசி மணலில் காவிரிக்கு குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்ட மத்திய அரசு ரகசியமாக பச்சைக்கொடி காட்டி உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு சொட்டு தண்ணீர்கூட வரப்போவது இல்லை.

எனவே, சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பே, அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதி நிதிகள் கூட்டத்தை முதல்- அமைச்சர் உடனடியாக கூட்ட வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.