அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு டென்மார்க்

June 04, 2017

 தமிழர் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.  தமிழின ஒற்றுமையை வலியுறுத்தும் அனைத்துச் செயற்பாடுகளும் எமது அடுத்த தலைமுறையினரை வழிநடத்தும் நோக்கையே கொண்டுள்ளன. தமிழ்ச்சிறார்கள் தங்கள் அடையாளத்தை இனங்காண்பதோடு மட்டுமல்லாமல், காலாகாலத்திற்கும் அது பேணப்பட வேண்டுமென்ற பொறுப்பையும் உணர வேண்டும்.

 அதற்கு அவர்கள் தாய்நாடு, தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் குமுகாயப் பொறுப்புள்ளவர்களாகவும் வாழ வழிசெய்ய வேண்டும். இவ்விலக்கை அடைய தாய்மொழியாம் தமிழ்மொழியைக் கற்பித்தலே சிறந்த செயற்பாடாக அமைகிறது.

 உலகெங்கும் பரந்து இயங்கும் தமிழ்மொழிக் கல்விநிலையங்கள் பல சவால்களையும் சமாளித்துக் கொண்டு தமிழ்மொழிக் கற்பித்தலை திறம்பட நடாத்துகின்றன. இன்று அனைத்துலகஞ் சார்ந்து நடாத்தப்படும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளில் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழித்தேர்வு மிக முக்கியமானது. 
 
இவ்வகையில் 2016 - 2017 கல்வியாண்டுக்குரிய அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு 03.06.2017 ஆம் நாள் சனிக்கிழமையன்று ஐரோப்பிய நாடுகளில் பரவலாக நடைபெற்றது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்திலிருந்து வளர்தமிழ் 1 – 12 வரையில் 1000 மாணவர்கள் தோற்றினர்.

 15 நகரங்களில் தேர்வுநிலையங்களை அமைத்து, இத்தேர்வை நிர்வாகத்தினர் சிறப்பாக நடாத்தி முடித்தனர். இதில் தோற்றிய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றி தமிழ்மொழியில் தமக்குள்ள எழுத்துத்திறனை வெளிக்காட்ட முனைந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதைப் பார்க்கையில் நாம் எமது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் 

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி December 15, 2017

என்றோ ஒரு நாள் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தமிழ்ப் புலிகளின் குரல் ஒலிக்கும்...