அனைத்துலக பெண்கள் தினம் 2016 -யேர்மனி

திங்கள் பெப்ரவரி 22, 2016

முதல் பெண் போராளியான மாலதியும் , முதல் பெண் கடற்கரும் புலிப் போராளியான அங்கயர்கண்ணியும் தமது கண்ணுக்கு முன்னால் தம் சமூகத்தை இராணுவம் அழிக்கும் கொடுமையைப் பொறுக்க முடியாமல் போராளியாகியவர்கள். போராட்டத்தை வேள்வியாக நினைத்து எதிர் கொண்டவர்கள்; களத்தில் தனித்து போராடி தமது உயிரையே ஈந்தவர்கள். இவர்களைப் போல் ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் சமூக அக்கறையின் முனைப்பில் தமது பங்களிப்பாக எதையாவது எமது இனத்துக்கு சாதித்துக் கொடுக்க வேண்டுமென்ற வேட்கையோடு தமது உயிரை பணயம் வைத்து களத்தில் நிற்கிறார்கள் .

அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறையின் முற்றுகைக்குள் வாழும் குடும்பப் பெண்களும் கூட ஒரு வகையில் போராளிகள் என்று தான் கொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்கையில் உயிர் வாழ்தலுக்கான அவசியத்தில் தன்னம்பிக்கை, துணிவு என்பன தான் துணையாக இருக்க முடியும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற வாழ்வின் நிகழ்தகவு விளையாட்டில் தினமும் ஆயுளைக் கழிக்கும் பெண்களாகவே தமிழீழப் பெண்கள் தமது வாழ்கைகைய வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெண்ணியம் பற்றிய ஒவ்வொரு அடிப்படை அம்சங்களும் பலவாறாக சிதைக்கப்பட்டும், சீரழிக்கப்பட்டும் கொண்டிருப்பது வெறும் இன ஒழிப்பின் அன்றாட ஊடகச் செய்தியாக மாத்திரமே வெளியிடப்படுகின றனவே தவிர அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த சர்வதேசத்தின் பெண்கள் அமைப்பும் இது வரை முயலவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

அந்தவகையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் தமிழ் பெண்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வில் அனைத்து யேர்மன் வாழ் தமிழ் மக்களையும் பங்கெடுத்து அத்தோடு பல்லின சமூகத்தினரையும் இவ் நிகழ்வுக்கு அழைத்து வருமாறு வேண்டுகின்றோம்.

“பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.” -
-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்-


தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி