அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் மிரட்டல்!

சனி டிசம்பர் 01, 2018

லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஜனவரி 30-ம் திகதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.

இதற்கிடையே, லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதை தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.

அப்போது பேசிய அவர், இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் திகதி போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், லோக் ஆயுக்தாவை நியமிக்காத மத்திய அரசின் செயலை கண்டித்து அன்னா ஹசாரே பிரதமர் அலுவலகத்துக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், லோக் ஆயுக்தாவை நியமிக்காததை கண்டித்து காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் திகதி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.