அன்பின் அகராதி

சனி நவம்பர் 26, 2016

அன்பு வாழும் ஆலயத்தை
அழகுறச் செய்யும் கவி…
அன்பே தலைவரான
அன்பின் அகராதி
 
மாமாவின் வருகை – அது
மகிழ்வூட்டும் பேருவகை
சோலை முழுவதும்
பூக்களின் ஆரவாரம்
காலை புலருமுன்னர்
கண்சிமிட்டிக் களிப்புடனே
கலகலத்துப் பாட்டிசைக்கும்
மழலை கீதம் மனதிற்சுகம்
 
பரபரப்பிற் பசுமை கொள்ளும்
பம்பரமாய்ப் பூக்கள் சுற்றும்
வருடத்தின் முதல்நாள்
தைத்திருநாள், சித்திரையும்
வந்துவிட்டால் வந்து சேரும்
வனப்புக்கோ வரம்பில்லை
மாமாவின் வருகையது
மனதுக்குள் அம்மாவின் வருடல்
 
கோலமிட்டு விளக்கேற்றிக்
குதூகலமாய்த் துள்ளியாடி
பூக்களேந்திப் பூக்கள் நிற்கும்
புன்னகையின் நிரம்பலுடன்
வருவது வான்கதிரோன் அல்ல- எம்
வாழ்க்கையின் ஒளிவேந்தன்
 
வந்திறங்கும் தலைவர் பாதம்
வந்து மண்ணைத் தொட முன்னே
சின்னப்பூக்கள் சூழ்ந்து கொண்டு
சிந்திவிடும் சிரிப்பொலியோ
சிந்தையிலே சந்தமிடும் – அவர்
அள்ளி அணைத்து இரு
குஞ்சுகளைத் தோளிலிட
ஆசையாக மற்றோரோ – அண்ணன்
சீருடையிற் தொங்கிவர
சற்றே வளர்ந்த பூக்கள்
பக்கம் வந்து வணக்கம் சொல்ல
பொங்கிப் பாயும் அன்பில்
பூரிக்கும் தாய்மை ஆழி
பொலிந்திடும் அண்ணன் முகத்தைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால்
பொய்மை நம்மை அணுகாதே
 
ஒவ்வொரு மழலைகளாய்ச்
செல்லமொழி உரைத்திடுவார்
என்னென்ன குறைநிறைகள்
எல்லாமே கேட்டறிவார்
வாஞ்சையாய் நலங்கேட்பார்
வார்த்தையால் அன்பு நெய்வார்
அண்ணன் வாய் முத்துக்களை
அள்ளிடுவார் சொற்களாக
அவர் வளர்க்கும் முத்துக்கள்
அவை அமுதமொழிகளன்றோ!
 
சிறப்பான உணவுகளும்
சில்லிடும் குளிர்களியும்
சிட்டுக்களுக்காகவே தலைவர்
கொண்டு வந்து விருந்திடவே
வந்திருக்கும் மாமாவுக்கு
வாய்க்கிதமாய் அறுசுவையும்
ஆக்கியளித்திடுவர் தாமே
அன்புப் பிள்ளைகள்
ஒரு கணமும் மாறாத
உறவின் புன்னகையில்
நிறைந்திடுவார் அண்ணன்
நீக்கமின்றி நெஞ்சறையில்
 
அறிவுசார் ஆலாபனைகள்
ஆரம்பிக்கும் மேடையிலே
ஆடல்கள் பாடல்கள்
அட்டகாசக் கவிமொழிகள்
நாடகங்கள் நல்லிசைகள் – என
களைகட்டும் கலையரங்கம்
தந்தையின் கனத்தோடும்
சிந்தையில் ரசிப்போடும்
கலைஞனின் சிலிர்ப்போடும்
கண்கள் பனிக்க அண்ணன்
களித்திருக்கும் வேளையிலும்
ஐந்தாறு குழவியர்
அண்ணனுடன் குழகிடவே
அப்பாவாய் அரவணைக்கும்
அவர் கரங்கள் ஆதரவாய்
அன்பின் அகராதி
அப்போது சுடர்ந்து நிற்கும்
 
பிஞ்சுகளைப்பேணுகின்ற
போராளிச் ”சித்திமார்க்கும்”
”பெரியம்மா” என விளிக்கும்
பொறுப்பான போராளிக்கும்
நிறைந்த நல்லறிவுரைகள்
நீரூற்றாய்ப் பொழிந்திடுவார்
சுரந்திடும் அவர் கனவை
வியந்தே கேட்டிருப்போம்
 
அண்ணன் மன எண்ணங்கள்
ஆழமாய் உள்ளம் சேர
அளவளாவி அன்பு தோய
அக்கணங்கள் மனங்கரைய – அவர்
தோளே தூளியாகத்
தூங்கிடுவர் சிறுபூக்கள்
வாரி அனணத்தெடுத்துக்
கொடுத்திடுவார் எம்கையில்
நகராமற் கடிகாரம்
நின்றிடாதோ அந்நேரம்- என
விடைகொடுக்க முடியாமல்
புடைசூழும் பூக்களெல்லாம்
அன்னையும் பிதாவுமாய்
அண்ணனே ஆகிநிற்க
அன்பே அன்புகொள்ளும்
அண்ணனின் பேரன்பு
அடைகாத்துப் பேணிடுவோம்
ஆயுள் கடந்த வேதமென்போம்
 
அன்பாற் பூச்சொரியும்
அவர் வளர்த்த பூக்களுமே
அண்ணன் நாமம் வாழும்வரை
அன்பு வாழும் அகிலமெல்லாம்
அவர் பதித்த அன்புநீதி
அதுவே அன்பின் அகராதி
 
கலைமகள்
26.11.2016