அப்பாவுடன் நடிக்க ஆசை!

Monday August 27, 2018

விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அப்படத்தை பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார் 

விக்ரம் பிரபு நடிப்பில் 60 வயது மாநிறம் வெளியாக இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

60 வயது மாநிறம்?

இது என்னுடைய முதல் ரீமேக் படம். ரீமேக் படங்களை கவனமாக தவிர்த்து வந்தேன். ஒரு படம் பண்ணினால் தொடர்ந்து அதேபோன்ற படங்களில் நடிக்க வேண்டிய சூழல் உருவாகுமோ என்று பயந்தேன். ஆனால் இந்த படத்தின் கதை என்னை மாற்றியது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான புரிதல் பற்றிய படம். தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் பிரச்சினைகளை விரிவாக பேசுகிறது.

அப்பாவுடன் எப்போது நடிப்பீர்கள்?

அப்பாவுடன் நடிக்க ஆசை. நல்ல கதைகளாக அமைந்தால் அது நடக்கும்.

பிரகாஷ் ராஜ், சமுத்திரகனியுடன் நடித்த அனுபவம்?

இருவரையுமே திரையில் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். எனக்கு பிரகாஷ்ராஜ் சாருடன் தான் அதிக காட்சிகள் இருந்தன. இருவரிடமும் நிறைய கற்றுக்கொண்டேன்.

தாணுவுடன் 3 படங்கள்?

ஒரு படத்திற்கு நான் மட்டுமே 120 சதவீத உழைப்பை கொடுத்தால் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களும் தரவேண்டும். ஒரு தயாரிப்பாளராக 200 சதவீத உழைப்பை தருபவர் தாணு. அவர் எந்த சூழலில் கேட்டாலும் மறுக்கவே மாட்டேன். ஒரு படத்துக்கு என்னென்ன தேவையோ அதை சரியாக கொடுப்பவர்.

அப்பா என்ன சொன்னார்?

கும்கி நடித்து முடித்த பின்னும் கூட சில நாட்கள் அந்த கிளைமாக்ஸ் காட்சி எமோ‌ஷனலோடே திரிந்தேன். நிஜ வாழ்க்கையை சினிமாவோடு இணைத்து குழப்ப கூடாது. ஆனால் சில இடங்களில் தவிர்க்கவே முடியாமல் பயன்படுத்த வேண்டி வரும். அப்படி இந்த படம் பண்ணும்போது என் அப்பாவுடனான உறவு, எமோ‌ஷனலை பயன்படுத்தி இருக்கிறேன். இன்னும் அப்பா படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு என்ன சொல்வாரோ என்ற பதற்றம் சின்னதாக இருக்கிறது.

வாரிசு என்ற அழுத்தம் இருக்கிறதா?

நடிக்க தொடங்கியபோதே ஏதோ ஒரு நம்பிக்கையுடன் தான் இறங்கினேன். தாத்தா, அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எப்போதுமே இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போலவே நினைத்து நடிக்கிறேன்.

அதிகமாக புது இயக்குனர்களுடன் பணியாற்றுகிறீர்களே?

எல்லா இயக்குனர்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன். புது இயக்குனர்கள், அனுபவ இயக்குனர்கள் என்று பார்ப்பதில்லை. நல்ல கதை என்றால் உடனே சம்மதித்து விடுவேன்.

தாத்தா, அப்பா இருவருமே பிற ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்தார்கள். நீங்கள் அப்படி நடிப்பீர்களா?

60 வயது மாநிறம் படத்தில் பிரகாஷ்ராஜ் சாருக்கு தான் முக்கியத்துவம் உள்ள வேடம். பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க தயார். அதற்கேற்ற கதை அமைய வேண்டும். ஒரு படமாக தான் பார்ப்பேனே தவிர நாம் இதில் எப்படி இருப்போம் என்று பார்ப்பதில்லை.