அமிதாப் பச்சனை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 8 கோடி!

Monday December 11, 2017

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 8 கோடியாக உயர்ந்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சன்(74) கடந்த 2010-ம் ஆண்டு சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். இதேபோல் 2012-ம் ஆண்டு பேஸ்புக் பக்கத்திலும் இணைந்தார்.

இவற்றில் திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை சுருக்கமாக அவர் பதிவிட்டு வருகிறார்.  அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை இன்று 31.7 மில்லியனாக (மூன்று கோடியே பத்து லட்சத்துக்கும் அதிகமாக) உயர்ந்துள்ளது.

பேஸ்புக்கில் அவரை 2 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 770 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். புகைப்படங்களை பதிவிடும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். இவைதவிர தனது கருத்துகளை கட்டுரை வடிவில் பதிவு செய்ய டம்ப்ள்ர் தளத்தில் தனிப்பட்ட வலைப்பூ (பர்ஸ்னல் பிளாக்) ஒன்றையும் அமிதாப் நிர்வகித்து வருகிறார்.

அவ்வகையில், அனைத்து வகையான சமூக வலைத்தளங்களிலும் தன்னை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 8 கோடியாக உயர்ந்ததுள்ளதாக அமிதாப் பச்சன் பூரிப்புடன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணமாக இருந்த தனது அபிமானிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.