அமெரிக்காவின் அரச சட்டமா அதிபரை பதவியில் இருந்து அகற்றினார் டிரம்ப்

செவ்வாய் சனவரி 31, 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிராக விடுத்த குடியேற்றத் தடை உத்தரவை ஏற்க மறுத்த அரச தலைமை சட்டமா அதிபரை டிரம்ப் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். 

சேலி யேட்ஸ் என்ற அந்தச் சட்டமா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுக்கு தான் பணிய மறுத்ததுடன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அறிவித்த குடியேற்றத்தடை உத்தரவின் சட்டபூர்வத் தன்மை குறித்த வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக வாதாட வேண்டாம் என்று அமெரிக்க நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குள் டிரம்ப் அவரைப் பதவியிலிருந்து அகற்றியுள்ளார். 

அவரது பதவி நீக்கம்  தொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதி டிரம்ப் இன் உத்தரவை மீறிய யேட்ஸ் அம்மையார் நீதித்துறைக்கு துரோகம் செய்து விட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது அமெரிக்க அரச சட்டத்தரணியாகப் பணியாற்றிவரும் டானா பொயண்ட்டே என்பவர் தற்காலிக அரச சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏழு முஸ்லீம் நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்திருக்கின்றார். மீறி வருபவர்களை விமான நிலையங்களில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு அமைய அமெரிக்காவுக்குள் சென்ற பலர் தடுத்துவைக்கப்பட்டுள்னர் எனத் தெரியவருகின்றது. 

அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை நாடு கடத்த வேண்டாம் என்றும் அவர்களைத் தடுத்து வைக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது இவ்வாறிருக்க, அமெரிக்க ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டபூர்வமானதுதானா என்பது குறித்த்து தான் திருப்தியடையவில்லை என்று அரச சட்டமா அதிபர் யேட்ஸ் அம்மையார் கூறியிருக்கிறார்.

நான் அரச சட்டமாக அதிபராக இருக்கும் வரை, இந்த நிர்வாக ஆணையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி எனது துறை வாதங்களை முன்வைக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் சேலி யேட்ஸ் அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டபூர்வ உத்தரவை அமல்படுத்த மறுத்ததன் மூலம் நீதித்துறைக்கு துரோகம் செய்துவிட்டார் என்று வெள்ளை மாளிகை கூறியது.

புதவி நீக்கம் செய்யப்பட்ட யேட்ஸ் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் நியமிக்கப்பட்டவர். ஆவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரச சட்டமா அதிபரான போயண்டேயும் ஒபாமா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்தான். அவரது நியமனம் 2015ல் அமெரிக்க செனட்டால் உறுதிப்படுத்தப்பட்டது. 

ஆனால், டிரம்ப் நிர்வாகம் நியமித்துள்ள புதிய அரச சட்டமா அதிபரின் நியமனத்தை இதுவரை அமெரிக்hக செனட்டினால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராஜதந்திரிகளும், ராஜீய அலுவலர்களும், இந்த நிர்வாக ஆணையிலிருந்து கருத்து முரண்படும் ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வரைவு அறிக்கை டிரம்ப்பின் நிர்வாக ஆணையை முறையாக விமர்சிக்கும்.

இது இவ்வாறிருக்க, தங்களுக்கு அடுத்துவரும் அதிபர்களின் நடவடிக்கையை முன்னாள் அதிபர்கள் விமர்சிக்காமல் இருக்கும் நடைமுறை அமெரிக்காவில் இருந்துவருகின்றது. அந்த நடைமுறையை மீறி முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தச் சர்ச்சை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக ஒபாமா கூறினார்.

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்ற நோக்கில் குடிமக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அணி திரளும் உரிமையைப் பயன்படுத்துவது அமெரிக்க விழுமியங்கள் நெருக்கடியில் வரும்போது அவர்கள் செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்தான் என்று ஒபாமா கூறினார்.

ஆனால் ஒபாமா இந்த அறிக்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.