அமெரிக்காவில் இன்று இடைக்கால தேர்தல்!

Tuesday November 06, 2018

அமெரிக்காவில் 435 நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், 35 செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் 36 மாநில கவர்னர் பதவிகளுக்காக இன்று நடைபெறும் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

அமெரிக்க காங்கிரஸ் என அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றம் செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 ஆகவும் உள்ளது.
 
இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக அதிபர் தேர்தலுடன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். 

இந்த முறை அதிபர் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என ஊடகங்கள் இந்த தேர்தலை குறிப்பிட்டு வருகின்றன.

மேலும், பதவிக்காலம் முடிவடையும் 35 செனட் உறுப்பினர்களின் தொகுதிகளிலும், 36 மாநில ஆளுநர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் தற்போதைய நிலவரப்படி பிரதிநிதிகள் சபையில் ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 235 ஆகவும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சார்ந்திருக்கும் ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 193 ஆகவும் உள்ளது. அதேவேளையில், செனட் சபையில் ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் கை ஓங்கி காணப்படுகிறது.

இதனால், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொண்டுவந்த ஒபாமா கேர் எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய குடியுரிமை கொள்கை போன்வற்றை அமல்படுத்த முடியாமல் அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுமாறி வருகிறார்.

இந்த இடைக்கால தேர்தலில் எப்படியும் தங்களது குடியரசு கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், (அமெரிக்க நேரப்படி) இன்று காலை அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. 

நாட்டின் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களான மைனே, நியூ ஹாம்ப்ஷைர், நியூ ஜெர்சி, நியூ யார்க், விர்ஜியானா ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின்படி பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் டிரம்ப் கட்சிக்கு 42 முதல் 55 சதவீதம் இடங்கள் கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஆனால், வேறுசில கருத்து கணிப்புகள் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் பெற்றி பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளன.

அப்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப்புக்கு போதுமான ஆதரவு கிடைத்தால் ஈரான் மீதான பொருளாதார தடை, சீனா மீதான வர்த்தக தடை உள்ளிட்ட அனைத்து கொள்கை முடிவுகளையும் அவர் வெகு சுலபமாக நிறைவேற்ற முடியும். அவரது ஆசை நிறைவேறுமா? என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.