அமெரிக்காவில் ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொலை

வியாழன் ஓகஸ்ட் 27, 2015

அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தின் ரோனோகி என்ற இடத்தில் WDBJ7 என்ற தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த தொலைக்காட்டசியின் 24 வயது பெண் செய்தியாளர் அலிசன் பார்க்கர் மற்றும் ஔிப்பதிவாளர் ஆடம் வார்ட் (27) ஆகியோர், நேரடி நிகழ்ச்சியொன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

அந்த நிகழ்ச்சி, நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் அவர்களை நோக்கி, சுமார் 8 தடவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணும், ஔிப்பதிவாளரும் இந்த கொடூர தாக்குதலில் உயிழிழந்தனர்.

 

முன்னர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட வெஸ்டர் ப்ளனாகன்(41) ப்ரைஸ் வில்லியம்ஸ் என்ற பெயரில் WDBJ7 தொலைக்காட்டசியில் பணியாற்றி வந்துள்ளார். திட்டமிட்டபடி, இந்த தாக்குதலை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அந்த கொடூர காட்சிகளை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.

 

இதை பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஜூன் 17 ஆம் திகதி தெற்கு கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் தேவாலயத்தில் 9 கறுப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற டைலம் ப்ரூப் (வெள்ளையர்) தான் இந்தக் கொலைக்கு உந்துசக்தியாக இருந்ததாகவும், அந்த தாக்குதலில் இறந்த ஒவ்வொரு கறுப்பினத்தவரின் பெயரும் தனது துப்பாக்கியின் தோட்டாவில் எழுதப்பட்டுள்ளதாகவும் கொலை செய்த நபர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தாக்குதலில் பலியான பெண் செய்தியாளரான அலிசன் பார்க்கர், இன வேறுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் தன்னிடம் பேசியதாகவும், ஔிப்பதிவாளர் ஆடம் வார்ட் தன்னைப் பற்றி மனிதவள துறையில் (HR department) புகார் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ப்ரைஸ் வில்லியம்ஸ் 23 பக்கங்கள் கொண்ட தற்கொலைக்கடிதத்தை WDBJ7 தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளளார்.

 

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே, கறுப்பினத்தவர்கள் மீதான வெள்ளையர்களின் வன்முறை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.