அமெரிக்காவில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்

வியாழன் சனவரி 12, 2017

அமெரிக்காவில் ஜனநாயகத்தை அனைவரும் சேர்ந்து காப்பாற்ற வேண்டும் என்று தனது கடைசி உரையில் ஒபாமா உருக்கமாக குறிப்பிட்டார். அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ல் பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து பதவி விலகும் அதிபர் ஒபாமா தனது ஆதரவாளர்கள் மத்தியில் சிகாகோ நகரில் அதிபராக கடைசி உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: 

 நான் பதவி ஏற்ற காலத்தை விட தற்போது அமெரிக்கா வலுவான நாடாக மாறி உள்ளது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்பு உள்ளது என்பதை உணராமல் நமது ஜனநாயகம் வலுவாக செயல்பட முடியாது. தற்போது நமது நாட்டில் உள்ள ஜனநாயகம் வரும் காலங்களில் நாம் பயப்படும் அளவுக்கு மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அமெரிக்காவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். தீவிரவாதம் நமது ஜனநாயகத்தையும் சோதித்து உள்ளது. ஜனநாயகத்தில் போட்டி எப்போதும் வலிமையாக மாற்றும். 

ஆனால் பிரிவினைப்படுத்துவது மிகவும் ஆபத்தானது. முஸ்லிம் அமெரிக்கர்களும் நம்மைப்போலவே நாட்டுப்பற்று மிக்கவர்கள்தான். அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதத்ைத சட்டப்பூர்வமான நடவடிக்கை மூலமே எதிர்கொள்ள வேண்டும். உலக அளவில் ஜனநாயகம், மனித உரிமை, பெண் உரிமை  ஆகியவற்றுக்காக போராடுவதில் இருந்து பின்வாங்கக் கூடாது. எந்த முடிவுக்காகவும் நாம் கவலைப்படாமல் ஜனநாயகத்தை கட்டமைக்கும் பணியில் சரியான முறையில் நாம் வாக்களிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட அத்தனை நாடுகளிலும் தற்போது அமெரிக்காதான் சிறந்தது. கடந்த 8 ஆண்டுகளாக அந்த இடத்தை உறுதி செய்துள்ளோம். 

இந்த காலங்களில் ஒரு தீவிரவாத தாக்குதல் கூட அமெரிக்காவில் நடந்தது இல்லை. ஒசாமா பின்லேடன் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்துள்ளோம். அமெரிக்காவின் மிகச்சிறந்த தலைமை தளபதியாக பணியாற்றியதை என்வாழ் நாள் முழுவதும் மறக்க இயலாது. மிகச்சிறப்பாகவும், வலுவானதாகவும் அமெரிக்காவை மாற்றி அமைத்து இருக்கிறோம். இந்த தலைமுறை இளைஞர்கள் தன்னலமற்ற, பொதுஉணர்வு மிக்க, நாட்டுப்பற்று மிக்கவர்களாக உள்ளனர். எனவே எதிர்காலம் நல்ல கரங்களில் ஒப்படைக்கப்படும் என்று நம்புவோம். இவ்வாறு ஒபாமா பேசினார்.

மனைவியை பற்றி பேசும்போது கலங்கினார்

மனைவி மிச்செலி மற்றும் மகள்கள் மலியா, ஷாசா பற்றி ஒபாமா கண்ணீர் வழிய பேசினார். அவர் கூறும்போது, “எனது அரசியல் கனவுக்காக கடந்த 25 வருடங்களாக மிச்செலி தன்னை தியாகம் செய்துள்ளார். அவர் என்னுடைய மனைவி மட்டுமல்ல. என் குழந்தைகளுக்கு தாய். எனக்கு நல்ல தோழி. எனது முன்மாதிரி. கருணை மற்றும் இரக்கத்தை கொண்டவர். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரையும் உறவினராக பார்க்கும் மனப்பான்மை கொண்டவர். இன்றைய தலைமுறைக்கு நல்ல முன்மாதிரி. எனக்கு பெருமை கிடைக்கச்செய்தவர். 

இந்த நாட்டை பெருமையடைய வைத்தவர். எனது மகள்கள் மலியா, ஷாசா நல்ல சூழ்நிலையில் வளர்ந்துள்ளனர். உங்கள் இருவரையும் மகளாக பெற்றதற்கு நான் பெருமை அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார். மிச்செலி பற்றி பேசும்போது ஒபாமாவால் பேச முடியவில்லை. அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அப்போது கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மிச்செலியை வாழ்த்தினர். அவரது மகள் மலியா தனது கண்ணீரை அடிக்கடி துடைத்தபடி இருந்தது அனைவரையும் உருக்கியது.