அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் பணியில் தமிழக மலைவாழ் மக்கள்

வெள்ளி சனவரி 27, 2017

அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் பணிக்கு தமிழக மலைவாழ் மக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இருளர்கள் பாம்பு பிடிப்பதில் திறமைசாலிகள் என்பதால் இந்த பணியில் நியமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மலைப் பாம்புகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக புளோரிடா மாகாணத்தில் அதன் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, அவற்றைப் பிடித்து அப்புறப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மலைப் பாம்புகளை பிடிக்க தமிழ்நாட்டை சேர்ந்த மலைவாழ் இருளர் இனத்தவர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புளோரிடா மீன் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு கமி‌ஷன் அவர்களை பணி நியமனம் செய்துள்ளது. தமிழக மலைவாழ் இருளர்கள் பாம்பு பிடிப்பதில் திறமைசாலிகள் என்பதை அறிந்து அவர்களை பணியில் நியமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாசிசடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகிய இருளர்கள் அங்கு பணியில் உள்ளனர். இவர்கள் புளோரிடா பல்கலைக்கழக வன விலங்கு உயிரின ஆய்வாளர் பிராங்க் மஷோட்டி தலைமையிலான குழுவினருக்கு மலைப்பாம்புகளை பிடிக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் 13 மலைப்பாம்புகளை இவர்கள் பிடித்துள்ளனர். கீலார்கோவில் உள்ள முதலை ஏரி தேசிய வன விலங்கு சரணாலயத்தில் 4 மலைப்பாம்புகள் பிடிப்பட்டன.

அவற்றில் ஒன்று 16 அடி நீள பெண் மலைப்பாம்பு ஆகும். முன்னதாக மோப்ப நாய்கள் மூலம் மலைப்பாம்பு இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது.