அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 50 பேர் பலி!

ஒக்டோபர் 02, 2017

அமெரிக்காவின் லாஸ் வேகாசில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேசினோ ஓட்டலில் நேற்று இரவு இசைக் கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். அனைவரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன், தான் வைத்திருந்த எந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினான். இதில், பலர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர்.

துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது. கச்சேரியும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்த காவல் துறையினர்    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், துப்பாக்கியால் சுட்டதில் 50 பேருக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். துப்பாக்கி சூடு நடத்திய பாடக் என்ற அமெரிக்கரை போலீசார் சுட்டுக் கொன்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு குறித்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 

செய்திகள்