அமெரிக்காவை கண்டித்து போராட்டம் நடத்திய வை.கோ உட்பட ஆயிரம் பேர் கைது, பின்னர் விடுதலை

திங்கள் செப்டம்பர் 28, 2015

தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஈழத் தமிழர்களும் புலம்பெயர், தமிழக உறவுகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதனை உதாசீனம் செய்து உள்நாட்டு விசாரணையே போதும் என்று கூறுகின்ற அமெரிக்காவைக் கண்டித்து போராட்டம் நடத்திய வை.கோ உள்ளிட்ட ஆயிரம் பேர் தமிழக பொலிஸரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

 

வை,கோ உள்ளிட்ட குழுவின் தீவிர போராட்டம் நடத்தி அதனைத் தொடர்ந்து அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோதே கைது செய்யப்பட்டனர். 

 

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையே போதும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் அறிவித்திருந்தன.

 

அதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட 25 இற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று திங்கட்கிழமை திரண்டனர்.

 

போராட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரது உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டன. அமெரிக்காவைக் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

 

இதையடுத்து துணை தூதரகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை பொலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.