அமெரிக்கா - பிரான்சை போன்று துருக்கியிலும் அதிபர் ஆட்சி

வெள்ளி நவம்பர் 18, 2016

அமெரிக்கா, பிரான்சை போன்று துருக்கியிலும் அதிபர் ஆட்சி முறை கொண்டு வரப்படுகிறது.துருக்கியில் அதிபராக ரீசெப் தய்யீப் எர்டோகன் அதிபராக பதவி வகிக்கிறார். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்து 2014-ம் ஆண்டு அதிபராக பதவி ஏற்றுள்ளார்.

தற்போது அவருக்கு அடுத்தப்படியாக 2 துணை அதிபர்கள் பதவி உருவாக்கப்பட உள்ளது. அதற்கான சட்டம் அடுத்த ஆண்டு கொண்டு வரப்பட உள்ளது. இத்தகவலை வளம் மற்றும் நீர்வளத்துறை மந்திரி வெய்செல் எரோகுலு தெரிவித்துள்ளார்.

துருக்கியில் பிரதமர் அமைச்சகத்துக்கு பதிலாக புதிய ஆட்சிமுறை கொண்டுவரப்படுகிறது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்று இங்கும் அதிபர் ஆட்சி முறை கொண்டு வரப்படஉள்ளது. அமெரிக்காவில் ஒரு துணை அதிபர் மட்டுமே உள்ளார். துருக்கியில் 2 துணை அதிபர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.

எர்டோகன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்று அதிக அதிகாரம் கொண்ட அதிபராக இருக்க விரும்புகிறார். துருக்கி பாராளுமன்றத்தில் தற்போது 550 உறுப்பினர்களில் எர்டோகனின் ஏகேபி கட்சிக்கு 330 பேர் உள்ளனர்.

எனவே இந்த மெஜாரிட்டியை பயன்படுத்தி ஆட்சி முறையை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார். துருக்கியில் பிரதமர்தான் நம்பர்-1 அதிகாரம் படைத்தவர். ஆனால் அவர் எர்டோகனின் கைப்பாவையாக உள்ளார்.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கவும் துருக்கியில் தனக்கு கீழ் ஒரு மனிதன் தனி அதிகாரம் திகழவும் எர்டோகன் விரும்புகிறார். அதற்காகவே ஆட்சி முறையை மாற்ற திட்டமிடுகிறார் என கூறியுள்ளனர்.