அமெரிக்கா, ரஷியா , பிரான்ஸ் வீரர்கள் விண்வெளி ஆய்வகத்துக்கு பயணம்

வெள்ளி நவம்பர் 18, 2016

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அமெரிக்கா, ரஷியா மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

இதேபோல், அங்கிருந்தும் வீரர்கள் பூமிக்கு திரும்பி வருவதுண்டு. அவ்வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த பெகி விட்சன், ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ்-ஐ சேர்ந்த ஓலெக் நோவிட்ஸ்கிய் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாமஸ் பெஸ்குவெட் ஆகியோரை விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, இந்த மூன்று விண்வெளி வீரர்களும் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 3.20 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.50 மணிக்கு) ரஷியாவின் சோயூஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்திய நேரப்படி வரும் சனிக்கிழமை மாலை சுமார் 3.30 மணியளவில் பூமிக்கு மேலே சுமார் 420 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இவர்கள் சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் மூவரில் அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளரான பெகி விட்சன்(56) என்ற பெண்மணி, தற்போது மூன்றாவது முறையாக விண்வெளி பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இன்னும் ஆறுமாத காலம் விண்வெளியில் இருந்தவாறு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துவிட்டு இவர் பூமிக்கு திரும்புகையில், விண்வெளியில் அதிகநாட்கள் வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரிய அமெரிக்கரான ஜெப் வில்லியம்ஸ் என்பவர் நிகழ்த்திய முந்தைய 534 நாள் சாதனையை பெகி விட்சன் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.