அமெரிக்கா - ரஷ்யாவுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை

செவ்வாய் நவம்பர் 15, 2016

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புட்டினும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா ஜனாதிபதிக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றி குறித்தும் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் சிரியா தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய உறவுகள் முற்றிலும் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லையென இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடத்துடன் 210 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ரஷ்யாவுடனான நிலையானதொரு உறவை பேண எதிர்ப்பார்த்துள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.