அமெரிக்க அதிபராக இருப்பதற்கான மனநலம் டிரம்புக்கு உள்ளதா?

Saturday January 06, 2018

டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அவரது மன நலம் குறித்த கேள்வியை எழுப்பும் புத்தகங்கள் வந்துள்ளன. அவரிடம் காண்பதாக சொல்லப்படும் உளவியல் அறிகுறிகள் குறித்து பல உளவியல் வல்லுநர்கள் முன்பே சந்தேகங்களை கிளப்பியுள்ளனர்.

ஆனால், தற்போது அமெரிக்காவில் அரசியல் சர்ச்சையை கிளப்பி இருக்கும், மைக்கேல் வோல்ஃப் எழுதிய 'ஃபைர் அன்ட் ஃப்யூரி' என்ற நூல், டிரம்பின் உளவியல் பற்றி கிளப்பியுள்ள பிரச்சினைகள் அவர் அமெரிக்க அதிபராகத் தொடர்வதற்குத் தேவையான உளவியல் தகுதி உடையவரா என்ற விவாதத்தை எழுப்பிவிட்டது. சமூக வலைத்தளங்களிலும், செய்தித் தளங்களிலும் இந்த விவாதம் நிரம்பி இருக்கிறது.

தமது புத்தகத்தை சந்தைப்படுத்துவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்ட வோல்ஃப், 71 வயதான டிரம்ப், கூறிய விஷயத்தையே மீண்டும் மீண்டும் கூறுவதாகத் தெரிவித்தார். கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது குறுகிய கால நினைவாற்றல் உள்ளிட்ட காரணங்களால் நிகழலாம்.

இது டெமன்ஷியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட ஆள்களில் 5 முதல் 8 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

"முன்பெல்லாம் கூறியதையே, வார்த்தை மாறாமல் வெளிப்பாடும் மாறாமல் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கூறிவந்த டிரம்ப், தற்போது அதை 10 நிமிடங்களுக்குள் செய்கிறார்," என்கிறார் வோல்ஃப். அவர் கூறுவது போல எந்தத் தருணத்தில் டிரம்ப் பேசினார் என்று எந்த விளக்கத்தையும் அவர் கூறவில்லை.

இந்தப் புத்தகத்தை மோசடி என்றும் பொய்களால் நிரம்பியது என்றும் விமர்சித்துள்ளார் டிரம்ப். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கூறுவதுபோல வெள்ளை மாளியை அணுகி உரையாடி தகவல்களைத் தெரிந்துகொள்ள அவருக்கு தாம் அனுமதி ஏதும் தரவில்லை என்கிறார் அவர்.

பேண்டி எக்ஸ் லீ என்ற உளவியல் பேராசிரியர் 'டேஞ்சரஸ் கேஸ் ஆஃப் டொனால்டு டிரம்ப்' என்ற பெயரிலும், அல்லென் ஃப்ரான்செஸ் என்பவர் 'ட்விலைட் ஆஃப் அமெரிக்கன் சேனிடி' என்ற பெயரிலும், கர்ட் ஆண்டர்சன் என்பவர் 'ஃபேன்டசிலேண்ட்' என்ற தலைப்பில் தலைப்பிலும் டிரம்பின் உளவியல் தொடர்பாக புத்தகங்கள் எழுதியுள்ளனர்.

பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடங்கிய ஒரு செனடர்களிடம் பேசிய பேராசிரியர் லீ, 'டிரம்பிடம் அறிகுறிகள் தெரிகின்றன. அவர் விரைவில் அவற்றை வெளியிடுவார்' என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த நூல்களை எழுதிய எவரும் டிரம்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அல்லர். அப்படியே அளித்திருந்தாலும் மருத்துவ நியதிப்படியும், அமெரிக்கச் சட்டத்தின்படியும், டிரம்பின் உடல் நலன் குறித்த தகவல்களை அவர்கள் வெளியிட முடியாது.

பதவிக்கு என்ன ஆகும்?

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25வது திருத்தத்தின்படி, தமது பணிகளையும், அதிகாரத்தையும் செயல்படுத்த அதிபரால் முடியாதபோது துணை அதிபர் பொறுப்புகளை எடுத்துக்கொள்வார். அதிபரின் அமைச்சரவையும், துணை அதிபரும் இதற்கான நடைமுறைகளைத் தொடக்கவேண்டும். தற்போதுள்ள நிலையில் அமெரிக்காவில் இது நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றபோதும், இதைச் செய்யவேண்டும் என்று பலர் குரல் கொடுக்கின்றனர்.

முந்தைய அதிபர்களில் யாருக்கு?

அமெரிக்க அதிபர்களில் சிலர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரஹாம் லிங்கனின் மன அழுத்த நோயால் பல சிக்கல்கள் எழுந்தன. மிக அண்மைக் காலத்தில், 1981 முதல் 1989 வரை அதிபராக இருந்த ரொனால்டு ரீகனுக்கு அடிக்கடி குழப்பமும், சமயத்தில் அவர் எங்கே இருக்கிறார் என்ற சந்தேகமும் வருவதுண்டு. அவர் பதவிக்காலம் முடிந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவருக்கு 'அல்சைமர்ஸ் டிசீஸ்' இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், 25-வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எந்த அதிபரும் இதுவரை அமெரிக்காவில் பதவி நீக்கப்பட்டதில்லை.

டிரம்புக்கு என்னதான் பிரச்சினை?

இதுவரை அவரது உடலைப் பரிசோத்ததாகக் கூறி மருத்துவர் எவரும் பேசியதில்லை, எனவே அவரது மன நலனைப் பற்றிப் பேசுவதற்கு உண்மையான ஆதாரங்கள் ஏதுமில்லை.

ஆனாலும், டிரம்புக்கு 'நார்சிஸ்டிக் பெர்சனாலிட்டி டிசார்டர்' என்ற பிரச்சினை இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினை இருப்பவருக்கு மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. டாம்பீகம் இருக்கும். மற்றவர்களைவிட தம்மை உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வர் என்று கூறப்படுகிறது.

இது தவிர, வோல்ஃபின் புத்தகம் வெளியானதை அடுத்து காக்னிடிவ் டிசார்டர் எனப்படும் புரிந்துகொள்ளல் குறைபாடு அவருக்கு உள்ளதா என்றும் சிலர் கேட்கின்றனர்.

அவர் முன்பு பேசுகிற முறையிலிருந்து இப்போது பேசுகிற தொனி பெரிதும் மாறுபட்டிருப்பதாக நரம்பியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றம் அவருக்கு 'அல்செய்மர்ஸ் டிசீஸ்' போன்ற ஏதேனும் ஒரு நரம்பியல் பிரச்சினையால் இருக்கலாம் அல்லது வெறும் வயோதிகக் கோளாறாகவும் இருக்கலாம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த விவாதம் நியாயமானதா?

இந்த விவாதம் வெட்கக்கேடானது, நகைக்கத்தக்கது என்கிறார் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா ஹக்கபீ சான்டெர்ஸ். அவர் உளவியல் தகுதி இல்லாதவராக இருந்தால், தகுதிவாய்ந்த பல வேட்பாளர்களைத் தோற்கடித்து இன்று இந்த இடத்தில் உட்கார்ந்திருக்க மாட்டார் என்பது அவரது வாதம். டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இது பாரபட்சமான தாக்குதல் என்கிறார்கள்.

உளவியலாளர்கள் தாங்கள் பரிசோதித்துப் பார்க்காத ஒருவருக்கு குறிப்பிட்ட நோய் இருக்கலாம் என்று கூறுவதை அவர்கள் தொழில் சார்ந்த அறம் அனுமதிக்கவில்லை என்றும், இப்படி செய்வதன் மூலம் கோல்ட்வாட்டர் ரூல் என்கிற விதியை அவர்கள் மீறுவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நான் மேதாவி: டிரம்ப்

இதனிடையே தமது மன நலன் கேள்விகளை நிராகரித்த டிரம்ப் தம்மை உறுதியான மனம் கொண்ட மேதாவி என்று வருணித்துக் கொண்டுள்ளார். முதல் முயற்சியிலேயே அமெரிக்க அதிபராவதற்கு அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது. மேதாவியாக இருந்தால்தான் முடியும் என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 'எனது வாழ்நாள் முழுவதிலும் என் இரண்டு பெரிய சொத்துகளாக இருப்பவை மன உறுதித் தன்மையும், அறிவோடு இருப்பதும்தான். குறுக்குப் புத்தியுள்ள ஹிலரி கிளிண்டன் இந்த வாதத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால், எல்லோருக்கும் தெரியும், அவர் பொசுங்கிப் போனார். நான் வெற்றிகரமான வியாபாரியாக இருந்து உச்சநிலை டி.வி. நட்சத்திரமாக உயர்ந்தவன்' என்று அவர் இன்னொரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.