அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி, இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தி

Sunday January 07, 2018

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் தேசியக் கொடிக்கு சமாந்தரமாக சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள சம்பவம் இந்திய மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் இந்திய – சிறிலங்கா உறவுகள் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படும் என சிறிலங்காவின் சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சிறிலங்கா அரசின் இந்தச் செயற்பாடு தொடர்பாக அவர்கள் கடும் விசனத்தையும் வெளியிட்டுள்ளனர். 

சிறிலங்காவை ஆக்கிரமிக்க சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், சீனாவின் தேசியக் கொடி அம்பாந்தோட்டையில் பறந்துகொண்டிருக்கின்றமை சிங்களவர்களிடையேயும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அம்பாந்தோட்டைத் துறைமுகம் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவத்திற்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டது. கடந்த முதலாம் திகதி தொடக்கம் அங்கு சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. 

மேற்படி துறைமுகத்தில் முன்னர் சிறிலங்கா தேசியக் கொடியுடன் துறைமுக அதிகார சபையின் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது. ஏனைய கொடிகளை விட சிறிலங்காக் கொடி சற்று உயரமாகப் பறக்கவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த முதலாம் திகதி முதல் சிறிலங்காவின் கொடி ஏற்றப்பட்டிருந்த கம்பத்தின் உயரம் குறைக்கப்பட்டு சீனாவின் தேசியக் கொடியும் சிறிலங்கா தேசியக் கொடியும் ஒரே உயரத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. 

இந்த விடயத்தை அறிந்த கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக புதுடில்லிக்கு அறிவித்துள்ளது. இதனால் இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. 

இது தொடர்பாக விரைவில் இந்திய மத்திய அரசின் கவலைகள் இராஜதந்திர ரீதியில் சிறிலங்காவுக்கு அறிவிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.