அயோத்தியா நகரில் 3 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி சாதனை!

Tuesday November 06, 2018

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் திகதி முதல் 6-ம் திகதி (இன்று) வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது.

இறுதி நாளான இன்றிரவு அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்து ஓராயிரத்து 152 அகல் விளக்குகளை ஏற்றி உற்சாகமாக தீப ஒளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில ஆளுநர், துணை முதல் மந்திரி உள்ளிட்ட இதர மந்திரிகள் மற்றும் இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தீபங்களின் ஒளிவெள்ளத்தில் அயோத்தியா நகரம் ஜொலிக்கும் இந்த தீபோத்சவம் காட்சியை கண்டு களித்தனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் மாறியுள்ளது. இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழை உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கினர்.