அரசியலில் மதங்களின் தலையீடு ஆரோக்கியமானதல்ல

செவ்வாய் பெப்ரவரி 09, 2016

சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஹாவாட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காக தென்னிந்திய நடிகரான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை அடுத்து அவர் ‘இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சவால்கள்’ தொடர்பாக உரையாற்றியுள்ளார். அது குறித்த விபரம் கீழே வருமாறு;

அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற கமல்ஹாசன், ‘இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசியதாவது;

பேச்சுரிமையின் அடித்தளமாக ஜனநாயகம் மட்டுமே உள்ளதாகக் கருதப்படுகிறது. அத்தகைய கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு தொடர் கண்காணிப்பு அவசியம்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஹிட்லர் சர்வாதிகாரியாக உருவெடுத்தது ஜனநாயக அமைப்பில் இருந்துதான். அதேபோல், இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனம் அமுல்படுத்தப்பட்டு கருத்துரிமை நசுக்கப்பட்டதும் ஜனநாயக ஆட்சியில்தான். அதேவேளையில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது. இந்தியாவில் எங்களால் அவ்வாறு பேசிவிட முடியாது.

அதற்காக இந்தியாவின் ஜனநாயகத்தை நான் விமர்சிக்கிறேன் என்று அர்த்தமல்ல. சொல்லப்போனால் எங்கள் நாட்டின் ஜனநாயகத்தை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே ஒவ்வொரு நாளும் மாறி வருகின்றன. புதிய சவால்களையும், வாய்ப்புகளையும் இந்த உலகம் எதிர்கொள்ளப் போகிறது. அத்தகைய சூழலில் இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டதாக திருப்திப்பட்டுக் கொள்ளமால், உலக அரங்கில் முன்மாதிரியாகத் திகழவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது குறித்து முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடிக்கடி குறிப்பிடுவார். ஆனால், அந்தப் பண்பை நாம் தற்போது வேகமாக இழந்து வருகிறோம். அரசியலில் மதங்களின் தலையீடு இருப்பது ஆரோக்கியமானது அல்ல எனத் தெரிவித்தார்.