அரசியலுக்கு கட்டுப்பட்ட தணிக்கைக் குழு

செவ்வாய் பெப்ரவரி 09, 2016

தமிழ்நாட்டின் சென்சார் போட் என அழைக்கப்படும் திரைப்பட தணிக்கைக் குழு இதுவரைகாலமும் ஆளும் அரசியல் கட்சிக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றது என திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரில் நடைபெறவிருந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கான கருத்தரங்கொன்றில் பேசும்போது, திரைப்படத் தணிக்கைக்குழுவானது சுயமாகச் செயற்படவேண்டுமெனவும் ஆனால் தமிழ்நாட்டில் அது அப்படிச் செயற்படாமல் தற்போதைய ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்டே செயற்படுகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், எனது மும்பை, இருவர் படங்கள் தணிக்கை குழுவால் பெரும் சோதனையையும் இன்னல்களையும் சந்தித்தது எனத் தெரிவித்ததுடன் இன்றைய சினிமா ரசிகர்கள் திரைப்படங்கள் பற்றி நிறைய அறிந்துவைத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். அத்துடன் நாளுக்கு நாள் அவர்களின் ரசிப்புத் திறன் அதிகரித்துச் செல்வதாகவும் இனிவரும் காலங்களில் அவர்களின் ரசனைக்கேற்பவே படங்கள் தயாரிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், ரசிகர்களின் ரசனைக்கேற்ப திரைப்படங்களை வழங்கவேண்டுமெனவும், அதற்கேற்றவாறு திரைப்படத்துறையின் முன்னேற்றத்திற்கும் நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டு மெனவும் தெரிவித்தார்.