அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது!

புதன் நவம்பர் 28, 2018

அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது என்று தோணி கபடி குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆரி தெரிவித்தார்.

கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது:-

நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கு எங்கு இருந்தோ நிவாரண உதவிகள் குவிகின்றன.

ஆனால் சென்னையைத் தாண்டி மற்ற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று கஜா புயலால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

 

அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது.

சினிமாவை வாழவைக்க வேண்டும். திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.

 

இவ்வாறு அவர் பேசினார்.