அரசியல் கைதிகளிற்காக யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்!

Friday September 21, 2018

சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது புனர்வாழ்வுடன் விடுதலை செய் எனும் கோரிக்கையுடன் யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.அரசியல் கைதிகளது கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,மார்க்சிசய லெனினிய  கட்சி உள்ளிட்ட பல கட்சிகளது பிரதிநிதிகள் ஆதரவு வழங்கி பங்கெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையத்துக்கு முன்னால்,பொது போக்குவரத்திற்கு எந்தவித குந்தகமுமின்றி குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்த வேண்டுகோளின் பேரில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நாளை சனிக்கிழமை வவுனியாவிலும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட்டமொன்றை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.