அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கு வீரவணக்கம்! - இளந்தமிழகத்தின்

செவ்வாய் அக்டோபர் 20, 2015

19 வயதில் தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்து கொண்ட சிவசுப்ரமணியன் சிவகாமி என்ற இயற்பெயர் கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறை பெண்கள் பிரிவுப் பொறுப்பாளராகத் இருந்த தமிழினி அவர்கள் கடந்த 18 ஆம் திகதி அதிகலை மூன்று மணியளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மகரகமா மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.தமிழினி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்; மலையகத் தமிழர்; 43 வயதே நிரம்பியவர்.

 

தமிழீழ மண்ணில் இவர் பணியாற்றாத இடமே இல்லை என்று கூறலாம். மேலும் சமாதானக்காலகட்டத்தில் இவர் ஆற்றிய பணி அளப்பரியது, 2009 ஆம் ஆண்டு புலிகள் தங்கள் ஆயுதங்களைமவுனித்த பின் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கை அரசின் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு 2013 ஆண்டு வரை சிறப்பு தடுப்புச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் இயல்பு வாழ்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு சிங்கள இராணுவத்தினரின் சித்திரவதைக்கும் கண்ணாணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்ததால் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டிருந்த தமிழினி அவர்கள் பெண்ணியவாதியாகவும் திகழ்ந்தார். சிங்களப் பெண்கள் மீதான அடக்குமுறை பற்றி அவர் கொண்டிருந்த பார்வை விசாலமானது. சிறந்த மதிநுட்பம், அறிவாற்றல், பேச்சாற்றல், படைப்புதிறன், உயர்ந்த பண்புகள், கம்பீரத் தோற்றம் நிறைந்த வீராங்கனையாக திகழ்ந்தவர்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் அரசியல் ஆளுமையை உணர்ந்து கொள்வதற்கு தமிழினி ஒரு நற்சான்றாகும். முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைக்கும் அதற்குப் பின் முள்வேலி முகாமில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்குமான இரத்த சாட்சியாக வாழ்ந்த வந்த தமிழினியின் இழப்பை எண்ணி உலகெங்கும் உள்ள தமிழீழ ஆதரவு ஆற்றல்கள் கண்ணீர் மல்கி நிற்கின்றனர்.

 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நிலைமையில் போராளிகளின் வாழ்நிலையை எண்ணினால் நமது நெஞ்சம் கனக்கின்றது. தேச விடுதலைக்கு போராடி விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தமது அரசை நிறுவியவர்கள் இன்று எதிரியின் இராணுவப் பிடியில் வாழ்ந்து கொண்டுள்ளனர். போராளிகளைப் பாதுகாத்திட வேண்டிய தலையாய கடமை தாயகத்திலுள்ள தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் உள்ள புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உண்டு என்பதை தமிழினியின் மரணம் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

 

தாம் உருவாக்கி வைத்த அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்ட நிலையில் போராட்ட நினைவுகளை மட்டும் சுமந்து போராளிகள் வாழ்ந்து வருகின்றனர். போராட்ட நினைவுகளை அழிப்பதற்கு சிங்கள அரசிடம் இயந்திரங்கள் ஏதும் இல்லை. அந்த அழியா நினைவுகள் தமிழீழக் கனவை நனவாக்குவதற்கான உந்து சக்தியாக விளங்கும். மாறியிருக்கும் உலக நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் படைப்பூக்கத்துடன் கூடிய புதிய போராட்ட வடிவங்களைத் தமிழீழ மக்கள் தெற்காசியாவுக்கு தருவார்கள். அந்தப் போராட்டங்களில் தமிழினிக்கள் மீண்டும் மீண்டும் உதிப்பார்கள்.

 

அண்மைக் காலங்களில் முகநூலில் தன்னை இணைந்து கொண்டு தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். தாயகத்தில் போருக்குப் பின்னான சுழலில் கல்வி நிலையங்களின் நிலை குறித்தும் அதன் மேம்பாட்டுக்கான தேவைகள் குறித்தும் செய்திகளை முகநூலில் பகிர்ந்துள்ளார். முகநூலில் தன் பக்கத்தில் “போரடிக்கும் கருவி” என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை வரிகள் இங்கே,

 

போரடிக்கும் கருவி
எல்லாமே முடிந்து
போனதாக
இறுகிப்போனது
மனசு.

இருப்பினும்
ஏதோவொரு
தொடக்கத்தை நோக்கியே
சஞ்சரிக்கிறது
சிந்தனை.

ஒவ்வொன்றிற்கும்
ஒரு காலமுண்டு
மௌனமாயிருக்கவும்,
பேசவும்,
பகைக்கவும்,
சிநேகிக்கவும்.

அதினதன் காலத்தில்
அத்தனையையும்
நேர்த்தியாக
நகர்த்திச் செல்கிறது
காலம்.

முந்தினதும்
பிந்தினதுமாக
சுழலும்
காலத்தின் கைகளில்
நானும் ஒரு
போரடிக்கும் கருவிதான்.

01.08.2015.
தமிழினி ஜெயக்குமரன்

தமிழினி அவர்களுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் வீரவணக்கம்! சுதந்திர தமிழீழ வானில் என்றும் சுடர்விடும் நட்சத்திரமாய் மிளிர்வார் தமிழினி!

 

தி. செந்தில்குமார்
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்

தமிழ்நாடு