அரசியல் மறுசீரமைப்பு பற்றி தெளிவு வேண்டும்!

ஒக்டோபர் 12, 2017

எதிர்காலத்தில் இன்னொரு முரண்பாட்டுக்கு வழிவகுக்காத வகையில், 'அரசியல் மறுசீரமைப்பு' பற்றி அனைவருக்கும் தெளிவான விளக்கம் வேண்டுமென, தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பின் மறுசீரமைப்புத் தொடர்பாக மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களுக்கு முழுமையான தெளிவை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியான பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவென அவர் கூறினார்.

இது குறித்து இன்று (12) அவர் மேலும் தெரிவிக்கையில்,

“'அரசியல் மறுசீரமைப்பு' எனும் தொனிப்பொருளிலமைந்த செயலமர்வுகளை மாவட்டத்திலுள்ள சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் மக்களோடு எந்நேரமும் ஒன்றித்து இயங்கி வரும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்குமிடையிலான கலந்துரையாடல் திட்டத்தை, தேசிய சமாதானப் பேரவை முன்னெடுத்துள்ளது.

“அதன் ஓர் அங்கமாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களுக்கு புதிய அரசியல் மறுசீரமைப்புப் பற்றிய தெளிவுபடுத்தல் இடம்பெற்று வருகின்றது.

“நமது நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அரசில் மறுசீரமைப்புப் பற்றி மக்கள் அனைவரும் குறிப்பாக சமூகத்தில் மக்களோடு செயற்படுகின்ற செயற்பாட்டாளர்கள் தெளிவடைந்திருக்க வேண்டும்.

“சமகால அரசியல் அறிவு இல்லாதவர்களாகவும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அக்கறை இல்லாதவர்களாகவும் நாம் இருந்தால், அது எதிர்காலத்தில் இன்னொரு முரண்பாட்டுக்கு வழிவகுக்கும்.

“எனவே, முரண்பாடற்ற, நீண்ட, நிலைத்து நிற்கும் சமாதானத்துக்குப் பல்வேறுபட்ட இலங்கையர் அனைவருக்குமிடையிலான கலந்துரையாடல்களும், விவாதங்களும், இணக்கத்துடனான புரிந்துகொள்ளும் முடிவுகளும் அவசியம். “குழப்பமில்லாத அரசியல் தெளிவை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும்” என்றார்.

செய்திகள்