அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்ப முடியாது!

Thursday March 08, 2018

ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நடிகை கௌதமி தெரிவித்தார்.

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நடிகை கௌதமி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

தமிழக அரசியல் தொடர்பாகவும், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்டபோது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான். கமல் மற்றும் ரஜினி திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை. இந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது’ என்றார் கௌதமி.

திருச்சியில் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழந்தது வேதனை அளிப்பதாகவும் கௌதமி கூறினார். மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் நடிகை கௌதமி நடித்த ‘மகளே’ என்ற குறும்படம் இன்று வெளியாகிறது.