அரியானா மாநிலத்தில் தலித் படுகொலை உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்

வியாழன் அக்டோபர் 22, 2015

அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத் மாவட்டத்தின் சன்பேர் என்ற கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்றை வீட்டினுள் வைத்து ராஜ்புத் சாதியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தியுள்ளனர்.  அதில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றும், பத்து மாதம் நிரம்பிய பெண் குழந்தை ஒன்றும் தீயில் கருகி இறந்துள்ளன.  அந்தக் குழந்தைகளின் தாய் ஆபத்தான நிலையில் தீக் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.

 


அந்த கிராமத்தில் ஏற்கனவே இருந்த பிரச்சனை ஒன்றின் காரணமாக தற்போது எரிக்கப்பட்ட தலித் குடும்பத்தை ஊரைவிட்டே வெளியேறுமாறு ராஜ்புத் சாதியினர் மிரட்டி வந்துள்ளனர்.  அது தொடர்பாக பாதுகாப்புக் கேட்டு தலித்துகள் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்தச் சூழலில்தான் இத்தகைய மனிதத் தன்மையற்ற படுகொலை நடந்துள்ளது. 

 


அரியானா மாநிலம் ஆணவக் கொலைகளுக்கும், தலித்துகள் மீதான வன்முறைகளுக்கும் பேர்போன மாநிலமாகும்.  அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைத்ததற்குப் பின்னால் இத்தகைய தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளன.  அண்மைக் காலமாக அரியானா முதல்வர் பெண்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசிய பேச்சுக்கள் மதவாத, சாதியவாதி சக்திகளை ஊக்கப்படுத்தியுள்ளது.  அதன் வெளிப்பாடே இந்தத் தாக்குதல் ஆகும்.

 


தலித் குடும்பத்தைக் கொளுத்திய வழக்கை இப்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப் போவதாக அரியானா முதலமைச்சர் கூறியிருக்கிறார்.  மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் சி.பி.ஐ. விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.  அதன் நேரடி கண்காணிப்பில் இந்தப் படுகொலை குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 


பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா முழுவதும் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.  மதவெறியும் சாதிவெறியும் கைகோர்த்து அலைகின்றன.  இதற்கு பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும்.  டெல்லியிலிருந்து வாக்கு சேகரிப்பதற்காக பீகார் மாநிலத்திற்கு பலமுறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லிக்கு அருகாமையிலிருக்கும் ஃபரிதாபாத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்லாதது ஏன்?  தலித்துகளின் படுகொலைகளை வன்கொடுமையாகப் பார்க்காமல் பயங்கரவாதச் செயலாக அரசு அறிவிக்க வேண்டும்.  பா.ஜ.க. ஆட்சியில் பெருகிவரும் தலித்துகள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்க அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.