அரியாலை இளைஞன் கொலை, விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இருவர் கைது

Friday November 03, 2017

யாழ்ப்பாணம் அரியாலையில் இளைஞன் ஒருவனைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர் எனச் சந்தேகிக்கப்படும் விசேட அதிரடிப் படையினர் இருவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். 

விசேட அதிரடிப் படைப் பிரிவின் புலனாய்வு அதிகாரி நிலாந்த மற்றும் புஷ்பகுமார ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர். 

அரியாலை பிரதேசத்தில் கடந்த 22 ஆம் திகதி இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த அவர் தனது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பின் பேரில் வெளியே சென்று அவனோடு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். 

அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது அவர்களின் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் சென்றமை, சுட்டுக்கொல்லப்பட்டிருந்த இடத்தில் கிடந்த வெற்றுத் தோட்டாக்களை அகற்றச் சென்ற முச்சக்கரவண்டி தொடர்பான விபரங்கள் வீதியோரக் கண்காணிப்புக் கமராக்களில் சிக்கிக்கொண்டன. அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

முதற்கட்டமாக, மேற்படி குழுவினர் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, மற்றும் துப்பாக்கி என்பவற்றை பொலிஸார் மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜராக்கப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.