அருணாசலப் பிரதேசம் செல்ல தலாய் லாமாவுக்கு அனுமதி

வெள்ளி மார்ச் 03, 2017

புத்த மதத் துறவி தலாய் லாமாவை அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல அனுமதி அளித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு சீனா கடுமையாக கண்டித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் திபெத்திய மக்களின் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது.

இதே கொள்கையை பின்பற்றிவரும் திபெத்திய நாட்டினர் சிலரும் தலாய் லாமாவுடன் இந்தியாவில் தங்கியவாறு தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் பல பேர் மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசம் மாநிலமும் தங்களது ஆதிக்கத்தின்கீழ் இருக்கும் திபெத் நாட்டின் ஒருபகுதி தான் என்று தொடர்ந்து கூறிவரும் சீன அரசு, அருணாசலப் பிரதேசம் மாநில அரசின் அழைப்பின்பேரில் தலாய் லாமா அங்கு செல்வதற்கு பலமுறை எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அருணாசலப் பிரதேசம் மாநில அரசின் அழைப்பை ஏற்று விரைவில் அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்கிறார். இதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு சீன அரசு தனது கடுமையான எதிர்ப்பையும், கண்டத்தையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் கெங் ஷுவாங் இன்று பீஜிங் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- சீனா-இந்தியா இடையிலான கிழக்குப் பகுதி எல்லை பிரச்சனை என்பது நிரந்தரமான, தெளிவான பிரச்சனையாக நீடித்து வருகிறது. இங்குள்ள தலாய் கூட்டத்தார் சீனாவுக்கு எதிரான பிரிவினை போக்குசார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது, நல்லது அல்ல.

இப்படி ஒரு பின்னணியில், தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக வெளிவரும் செய்திகள் இந்தியா மற்றும் சீனாவின் நிரந்தரத்தன்மை மற்றும் அமைதிக்கு மோசமான பாதிப்பதை ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவையும் பாதிப்பு அடையச் செய்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.