அருண்டவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்..!

வியாழன் டிசம்பர் 24, 2015

ஈழமுரசு இதழ் கடந்த மாவீரர் தினத்தை முன்னிட்டு சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டதை வாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். மாவீரர் தினத்தை முன்னிட்டு ஈழமுரசு சிறப்பிதழாக வருவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்லத்தான். ஆனால் இம்முறை வெளிவந்த சிறப்பிதழில் தமிழீழ விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த தமிழக மாவீரர்களின் விபரங்களை முதல் தடவையாக ஈழமுரசு வெளியிட்டிருந்தது சிலருக்கும் புருவத்தை உயர வைத்திருந்தது.

ஐயையோ...! காட்டிக் கொடுத்துவிட்டார்கள், இரகசியத்தை உடைத்துவிட்டார்கள் என்று புலம்புபவர்கள் ஒருபுறமிருக்க, ஈழமுரசு மீதான தங்கள் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் சக்திகளுக்கு மெல்வதற்கு அவல் கிடைத்த மகிழ்வில் மென்று துப்பத் தொடங்கிவிட்டார்கள்.

மெத்தப்படித்த அதிமேதாவிகளும் அவர்கள் எழுதும் குப்பைகளைப் போட்டு இணைய ஊடகம் நடத்தும் ‘ஜம்பவான்களும்’ இந்த விடயத்தை ஊதிப் பெருதாக்கித் தங்கள் வித்துவத்தனத்தைக் காட்டவெளிக்கிட்டுவிட்டனர். ஆனால் அருண்டவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய் என்பதுபோல் இவர்களின் அறிவிலித்தனம்தான் இதில் வெளிப்பட்டுள்ளது.

ஈழமுரசு எந்தவொரு மாவீரர் தகவலையும் ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதில்லை என்பதை வாசகர்களே நன்கு அறிவார்கள். விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட ஒளிவீச்சு காணொளிகளில் மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டதாக பதியப்பட்டுள்ள விபரப் பகுதியை எடுத்துப் பாருங்கள், அதில் வீரச்சாவைத் தழுவிய தமிழகத்தைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களுடன் அவர்களின் நிழற்படங்களையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட மாவீரர் விபரக் கையேட்டை எடுத்துப் பாருங்கள், அதில் இந்த மாவீரர்களின் விபரங்கள் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தியே பதியப்பட்டுள்ளன. இதில் எந்தவொரு தகவலையும் ஈழமுரசு சுயமாக வெளியிடவில்லை. விடுதலைப் புலிகளின் வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டே அவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் தேடலை அதிகம் மேற்கொண்டிருந்தால், மேலும் பல தமிழீழ விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த தமிழகச் சேர்ந்த மாவீரர்களை அடையாளம் கண்டிருக்க முடியும்.

கட்டுரைகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ளும் அதிமேதாவிகள் கட்டுரைகளை எழுதுவதற்கு முன்பாகவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட ஆவணங்களையும் ஒருமுறை படித்து, பார்த்து, கேட்டு உங்கள் மெய்யறிவை வளர்த்துக்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டால் நன்றாகவும், நம்பத் தகுந்ததாகவும் இருக்கும்.

இதனைவிட, ஈழமுரசு இந்த விபரங்களை வெளியிட்டதால்தான் இந்தியாவிற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழக இளைஞர், யுவதிகள் இருந்ததும் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டதும் தெரியவந்துவிட்டது என்றும் பெரும் குண்டைத் தூக்கிப் போட்டிருகின்றார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழக இளைஞர், யுவதிகள் இருந்தமையும், அவர்களில் சிலர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டமையும் தெரிந்துகொள்ள முடியாதளவிற்கு அடிமுட்டாள்களாகவா இந்தியப் புலனாய்வுத்துறை இருக்கின்றது! விடுதலைப் புலிகளின் இரகசியங்களையே அறிந்துகொள்ளத் துடிக்கும் இந்தியப் புலனாய்வுத்துறை, விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் ஆவணங்களையும் வெளியீடுகளையும் பார்வையிடாமல் கண்ணை மூடிக்கொண்டா இருக்கின்றது..? எத்தனை சிறுபிள்ளைத் தனமானவர்களின் சிந்தனையாக இது இருக்கின்றது.

ஈழத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னலைக் கேட்டும், தமிழர்களை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் அப்துவ் ரவூப், முத்துக்குமாரன் என எத்தனை எத்தனை தமிழக உறவுகள் தங்கள் உடல்களையே கொடும் தீக்கு இரையாக்கி, தங்கள் உயிர்களையே அர்ப்பணித்து அந்த இனப்படுகொலையை தடுக்க முயன்றிருக்கின்றார்கள் என்றால், தமிழீழ விடுதலையை நேசிக்கும் இலட்சக் கணக்கான தமிழக மக்களில் எத்தனை பேர் ஈழ விடுதலையை நேசித்து தங்கள் உயிர்களையே அந்த நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிக்க துணிந்திருப்பார்கள். தமிழீழ விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அத்தனை தமிழக மாவீரர்களும் ஈழத் தமிழ் மக்களுக்கு கிடைத்த சே குவேராக்கள். அவர்களின் அர்ப்பணிப்பை விடுதலைப் புலிகளே மறைக்க முயலவில்லை. நாங்கள் யார் மறைப்பதற்கு..?

- ஊடக மையம்

http://eelamurazu.com/