அறப்போர் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்! காவல்துறைக்கு வைகோ கண்டனம்

புதன் அக்டோபர் 28, 2015

குளிர்பான நிறுவனமாகிய பெப்சி-க்கு நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை மிக மிகக் குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் அக்கட்சினர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அறப்போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்மன் தெரியாமல் தடியடிப் பிரயோகம் நடத்தியதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் காவேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

தாமிரபரணி தண்ணீர் விவசாயப் பாசனத்திற்கு பயன்படுவதோடு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிதண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. பன்னாட்டு கம்பெனியான கொக்கக் கோலா நிறுவனம் ஏற்கனவே அமைத்துள்ள குளிர்பான உற்பத்தி நிலையத்துக்கும், நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கும் பெயரளவு கட்டணத்தைப் பெற்று பெருமளவு தண்ணீர்  பயன்படுத்தி வருகிறது.

 

பெப்சி நிறுவனம் நாள் ஒன்றுக்கு 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை, லிட்டர் ஒன்றுக்கு 36 காசு விலைக்கு வாங்கி, பாட்டில்களில் அடைத்து, ஒரு லிட்டர் பாட்டிலை 30 ரூபாய்க்கு விற்று கொள்ளையடிக்கப் போகிறது. 15 இலட்சம் லிட்டர் என்று கூறினாலும், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தாமிரபரணியிலிருந்து பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ஆண்டு ஒன்று 300 கோடி ரூபாய்க்குக் குறையாமல் கொள்ளை லாபம் பெற இருக்கும் பெப்சி கம்பெனிக்கு எந்த அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அனுமதி கொடுத்தன?

 

தமிழக வாழ்வாதரங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே இந்தப் பகல் கொள்ளைக்கு உடந்தையாக இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

 

இந்நிலையில், மேலும் ஒரு குளிர்பான நிலையம் பெப்சி அப்பகுதியில் அமைவது பொதுநலனுக்கு ஏற்றதல்ல என்பதால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஜனநாயக உரிமையின்படி அறப்போர் நடத்தியவர்களை தடுத்து கைது செய்யலாம். ஆனால், அடக்கு முறையை பிரயோகிப்பதற்கு காவல்துறையினருக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பெப்சி நிறுவனத்துக்கு கொடுப்பட்ட அனுமதியை இரத்து செய்ய மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.