அவர்கள் ஒன்றும் கையை கட்டி வேடிக்கை பார்த்திருக்கவில்லை... - ச.ச.முத்து

December 11, 2016

மாவீரர் நாளும் அதன்போது தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஏற்பட்ட எழுச்சியும் உணர்வுமிக்க ஒன்று திரள்வும் 2009க்கு பின்னர் இந்த வருடம்தான் மகத்தானதாக இருந்தது.

இந்த நிகழ்வுகளில் ஒன்றுதிரண்ட மக்களின் உணர்வு என்பது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான ஒன்று. அதிலும் கிளிநொச்சியிலும் முழங்காவிலிலும் தமது உறவு ஒன்றின் கிளறி எறியப்பட்ட கல்லறை இருந்ததாக கருதப்படும் நிலத்தில் விழுந்து கதறும் அந்த தாய்மாரின் கண்ணீரின் கனம் என்பது நாம் புலம்பெயர்தேசங்களில் வண்ணவிளக்குகளுடன் முன்னெடுத்த நிகழ்வுகளைவிட வித்தியாசமானது.

ஒரு தரம் உங்களின் திருமுகம்காட்டி மறுபடி தூங்குங்கள்? என்ற மாவீரர் பாடலின் அத்தனை வரிகளுக்கும் சத்தியமான காட்சி அவை. அதேநேரம் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்நாளுக்கு மாதம் முன்னதாகவே முழுதான ஈடுபாட்டுடனும் செயற்திறனுடனும் வேலை செய்த அனைத்து செயற்பாட்டாளர்களும் பாராட்டுக்குரியவர்களே.

அந்த ஒரு நாளில் ஏற்படுத்தப்பட்ட உணர்வலையும் இலட்சியம் பற்றிய வேட்கையும் இனி வரப்போகின்ற ஒரு வருடத்துக்கு தேவையான சக்தியையும் உறுதியையும் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கியே இருக்கும்.

தமிழகத்திலும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இம்முறை மாவீரர் நிகழ்வுகளின் பேரெழுச்சியானது எமது தாயகத்துக்காக தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கிய மாவீரர்களை என்றென்றும் நன்றியுடன் நினைப்போம் என்ற பெரும் சேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மெளனமாகி ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது. இனி மெதுமெதுவாக மாவீரரின் போராட்ட நினைவுகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று கனவுலகில் கோட்டை கட்டி இருந்த அத்தனை பேரினவாத சக்திகளுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் தெளிவான ஒரு பதிலை எமது மக்கள் அந்த நாளில் தமது உணர்வுமிகுந்த திரள்வின் மூலம் கொடுத்து விட்டிருக்கிறார்கள். அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்பான காலம் என்று ஒன்றை உருவாக்க அல்லும் பகலும் உழன்றபடி இருக்கும் பிராந்திய மேலாதிக்கத்துக்கும், வல்லாதிக்கத்துக்கும் மிக இயல்பாகவே எமது மக்கள் ஒரு சேதியை தெரிவித்துவிட்டார்கள். இது இவ்வளவும் மக்களின் சேதி மட்டுமே. இனிமேல்தான் இதில் நாற்காலி அரசியல்வாதிகளின் சேதி என்ன, சிங்களத்தின் சேதி என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

2009க்கு பின்னரான மாவீரர் நாட்கள் தாயகத்தில் எந்தவொரு உணர்வலையையும் ஏற்படுத்தாமல் கடந்துபோய் இருக்கவில்லை. அந்த நாளை எவ்விதம் எமது மக்கள் மறந்திருப்பர். ஆனால் ஓர் இனஅழிப்பு கொடூரமாக நிகழ்தேறிய வடுக்களில் இருந்து குருதி வடிந்தபடி இருந்த அந்த பொழுதுகளில், அந்த நாளை எமது மக்கள் தமது நெருங்கிய உறவுகளுடன் கதைத்து தமது வீடுகளில் ஒரிடத்தில் உயிரை உருக்கிய தீபம் ஏற்றி மனதார வணங்கியே நின்றார்கள். அதிலும் யாழ் பல்கலைகழக மாணவர்கள் அந்த நாளை 2009க்கு பின்னர்கூட எந்தவிதத்திலாவது தீபம் ஏற்றி நினைவுகூர்ந்தபடியே இருந்தனர். சுற்றிவர சிங்களபடை புலனாய்வு வேட்டை இருந்தபொழுதிலும்கூட ஒன்றும் இயலாத பொழுதில்கூட பல்கலைகழக விடுதியின் மேலுள்ள தண்ணீர்தாங்கியின் மீது பெரு விளக்கேற்றி அதனை யாழ் நகரில் இருந்துகூட பார்க்க கூடியவாறு செய்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2009க்கு முன்னர் எந்த எந்த துயிலுமில்லங்களில் மாவீரர்நாளை உணர்வுடன் முன்னெடுத்திருந்தார்களோ அந்த மண்ணில் இம்முறை தீபங்கள் ஏற்றப்பட்டு எமது மக்கள் திரண்டது இந்த வருடத்துக்குரிய ஒரு வித்தியாசம். இது வெறுமனே சிங்களத்தால் தடுத்திருக்க முடியாத ஒரு நிகழ்வா? அப்படி சிங்களத்தின் சக்தி மீறிய பெரும் சக்தி ஒன்று தமிழர்களிடையே உருவாகி உள்ளது என்ற அச்சத்தினாலா சிங்களம் இதனை நடக்க விட்டது? என்னதான் இதற்கு மறுநாள் 28ம் திகதி கனேடிய தமிழ் வானொலிக்கு செவ்வி வழங்கியிருந்த சிறீதரன் மாவீரர்நாளை நடாத்த அனுமதித்திருந்த சிங்களதேச தலைவர் மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் நன்றி தெரிவித்திருந்தாலும், சிங்களதேச அமைச்சர் மனோ கணேசன் தன்னுடைய தொடர் முயற்சியால்தான் இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் விளக்கேற்றி நினைவுகூர மக்கள் அனுமதிக்கப்பட்டனர் என்று பெருமிதம் கொண்டாலும் சரி சிங்களத்தின் ஒரு நுணுக்கமான திட்டமிடுதலும் இதற்குள் இருக்கலாம் என்றே கடந்த கால சிங்களத்தின் உள்சுழியோடும் இராஜதந்திரமுறைகளை பார்க்கும்போது இருக்கிறது.

மாவீரர் தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஒரு சேதியை சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் சொல்வதுபோல இம்முறை சிங்களமும் அந்த நாளில் ஒரு சேதியை உலகுக்கு சொல்ல முற்பட்டுள்ளது. சிங்களதேச இராணுவ முகாம்களுக்காக தமிழர்களின் காணிகள் பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன. தமிழர் தேசமெங்கும் புத்தர் சிலைகள் சிங்கள ஆயுதப் படைகளின் அனுசரணையுடன் நிறுவப்படுகின்றன. தமிழர்கள் இன்னும் சிறைகளுக்குள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பலவந்தமாக சிங்களக் குடியேற்றங்களால் பிடுங்கப்படுகின்றன, போன்றவையும் எல்லாவற்றையும்விட சர்வதேசம் வலியுறுத்திய இனப்படுகொலை விசாரணையை சிங்களம் இழுத்தடித்து செய்யாமல் இருக்கின்றது போன்ற அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஒற்றை பதிலாக எம்மை எதிர்த்து ஆயுதந்தூக்கி போராடிய விடுதலைப் புலிகளை நினைவுகூரும் உரிமையைக்கூட இந்த நல்லாட்சி அரசு வழங்கி இருக்கிறது என்ற பிரச்சாரத்துக்கு இந்த அனுமதி பெரிதும் உதவும் என்றே சிங்களம் கருதுகின்றது.

மேலும் இன்னுமொரு விடயம் மிக முக்கியமானது, சிங்கள தேசம் எப்போது தமிழர் தரப்பில் மிதமவாத எண்ணங் கொண்ட அரசியல் தலைமையையே பெரிதும் விரும்பிவந்துள்ளது. அத்தகைய தலைமைகளை உருவாக்குவதிலும் அவர்களுக்கு பெரு நிதியங்களை நாடாளுமன்றம் மூலம் ஒதுக்கி அவர்களின் பலத்தை ஓங்க வைப்பதிலுமே சிங்களத்தின் மூலோபாயம் இருந்து வந்துள்ளது. ஏனெனில் தமிழர்களின் மிதவாத சக்தி என்பது சிங்களம் தந்ததை மனமுவந்து காலில் விழுந்து ஏற்றுக் கொண்டு அமைதியுறும் பக்குவம் கொண்டது என்று சிங்களத்துக்கு தெரியும்.

காலகாலமான தமிழர்களின் உரிமை எழுச்சிகளை இத்தகைய மிதவாத தமிழ் தலைமைகளை கொண்டே சிங்களம் வெற்றி கொண்டு வந்துள்ளது. ஆயுதப் போராட்டம் நிமிர்ந்தெழுந்து உச்சம் கொண்ட 80களின் ஆரம்பத்தில்கூட அமிர்தலிங்கம் தலைமையிலான மிதவாத தலைமை கொண்டு எமது எழுச்சியை தடுத்து திசை மாற்ற சிங்களம் கடும் பிரயத்தனம் செய்தது. ஆனால் பிரபாகரன் என்ற அதிமானுடனின் வழிகாட்டலும் உறுதியும் அந்த சிங்கள ஆதரவு மிதவாதிகளை தோல்வியுறவைத்தது வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டுள்ளது.

ஆதிக்கசக்திகள் எப்போதும் ஒரு வியூகத்தை வரைந்து வைத்திருப்பார்கள். ஏறத்தாழ இருகோடுகள் தத்துவம் போன்றது அது. நிமிர்ந்து நிற்கும் போராட்ட சக்திக்கு அருகிலேயே அதனைவிட பெரிய ஒரு கோடு ஒன்றை மிதவாதிகளை கொண்டு வரைவார்கள். இது சிங்களம் மட்டும் அல்லாமல் உலகம் முழுதுமான ஆதிக்கசக்திகளின் ஒரு முறைமை. பாலஸ்தீனத்தில் பத்தா அமைப்பை சார்ந்த அபாஸ் முன்னிறுத்தப்படுவதும், காஸ்மீரத்தில் ஜம்மு காஸ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்ணணி போன்றவையும் அதன் தலைவர் யாசின் மாலிக் போன்றவர்கள் இந்தியாவால் முதன்மைப் படுத்தப்படுவதும் இந்த ஆதிக்கசக்தி பொறிமுறையினாலே ஆகும். அந்த பொறிமுறையே இம்முறை மாவீரர்நாளில் சிங்களம் பிரயோகித்துள்ளது என்று தோன்றுகின்றது.

விடுதலைப் புலிகளின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க மக்கள் பேரவையின் அறைகூவலாக எழுக தமிழுக்கு மக்களை அணிதிரள வேண்டுகோள் விடப்பட்டபோது நல்லாட்சி அரசுக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் இது என்று கருத்துகூறிய சிறீதரன் மிகத் துணிச்லாக(?) விடுதலைப் புலிகளின் துயிலுமில்லத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் பாடலுக்கு விளக்கேற்றுகிறார் என்றால் அவரது நல்லாட்சி அரசுக்கு இது பங்கமும் பிரச்சனையும் கொடுக்காது என்று நம்பி செய்தார் என்று யாராவது நம்பினால் அவர்களுக்காக வருந்துகிறோம்.

புரட்டாசி சனிக்கு எள் எரிக்க எழுக தமிழ் நாளில் வந்தால் மட்டுமே சனீஸ்வரன் ஏற்றுக்கொள்வார் என எழுக தமிழுக்கு மக்களை அணிதிரள விடாமல் உதயனில் செய்தி வெளியிட்ட சரவணபவன், மாவீரர் துயிலுமில்லம் வந்து சுடர் ஏற்றுகிறார் என்றால் அதன் பின்னால் இருக்கும் அரசியல் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

நேற்றுவரை மக்கள் அவரவர் வீடுகளில் அமைதியாக சுடர் ஏற்றுங்கள் என்று அறிவுரை வழங்கிய மாவை வந்து தீபம் ஏற்றுகிறார் என்றால், இனப்படுகொலையின் உச்சத்தை நினைவு கொள்ளும் முள்ளிவாய்க்கால் நாளில்கூட பகிரங்கமாக தீபம் ஏற்ற பயந்து தனது அலுவலகத்தில் தீபம் ஏற்றியதாக(?) பீத்திக் கொண்ட அடைக்கலம் செல்வம்கூட இம்முறை ஜோதியில் கலந்து கொள்கிறார் என்றால் இது ஏதோ சும்மா விடயமோ தற்செயலான விடயமோ இல்லை வாசகர்களே.

இடைக்கிடை கோமாளித்தனமான பேச்சுகளை வெளியிட்டாலும்கூட இப்போதைக்கு சிங்களத்துக்கு ஒரு காத்திரமான எதிர்க்குரலாக வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களே இருக்கிறார். வடக்கு - கிழக்கு இணைப்பு, சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறை, அபகரிக்கப்பட்ட நிலங்களைவிட்டு இராணுவம் வெளியேற வேண்டும் போன்ற விக்கினேஸ்வரனின் கோரிக்கைகள் இப்போதைக்கு மிக தீவிரமானவையாகவே சிங்களத்துக்கு இருக்கிறது. நல்லாட்சி என்ற பெயருடன் மீண்டும் சர்வதேச வலம்வர சிங்களம் எடுக்கும் முயற்சிகளுக்கு விக்கினேஸ்வரனின் தற்போதைய கோரிக்கைகள் ஒருவித சங்கடங்களை கொடுக்கிறது. அத்துடன் இத்தகைய கோரிக்கைகள் என்பவை தமிழ்தேசியத்தின் கோரிக்கை என்பதால் கூட்டமைப்பினரைவிட மக்களால் வடமாகாண முதல்வர் நேசிக்கப்படுகிறார் என்று சிங்களம் நினைக்கிறது.

எதாவது சாகசம் ஒன்றை செய்துதன்னும் மீண்டும் கூட்டமைப்பு தலைகளை தமிழ் மக்கள் மத்தியில் நேசிப்புக்கு உரியவர்களாக கொண்டுவந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள் சிங்களத்துக்கு. ஏற்கனவே கூட்டமைப்பின் அதிகமான பெருந்தலைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாக எதிர்த்தபோதிலும்கூட எழுக தமிழுக்கு திரண்ட மக்கள் கூட்டம் இன்னுமொரு அரசியலின் ஆரம்பத்தை கட்டியம் கூறியதை சிங்களம் மறந்திருக்கவில்லை.

இம்முறை உணர்வுடன் திரண்ட மக்களுக்கு முன்பாக கூட்டமைப்பின் தலைகள் தோன்றி மாவீரர் தீபம் ஏற்றியதும் பொதுச்சுடரை ஏற்றியதும் இதற்காகதான். இது நிகழ வேண்டும் என சிங்களம் விரும்பியே கொஞ்சம் ஒதுங்கி நின்றது.

ஆக சிங்களமானது தனது நீண்டகால செயற்திட்டத்துக்கு ஒரு முன்னேற்பாடாகவே இவர்களை முன்னிலைப்படுத்திய மாவீரர் நாளை அனுமதித்திருந்தது.

மூன்றுவிதமான வெற்றிகள் மூன்றுவிதமான சக்திகளுக்கு இதில் கிடைத்துள்ளது...

1) மாவீரர்களையே பகிரங்கமாக நினைவு கொள்ளுமளவுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிங்களத்துக்கு எதிரான ஒரு அரசியலை செய்கிறார்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கி இருக்கும் கூட்டமைப்பு பா.உ க்கள்...

2) சிங்களத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்ட விடுதலைப்புலி வீரர்களை அவர்களின் கல்லறை கோட்டத்துள் நினைவு கொள்ள மக்களுக்கு அனுமதி அளித்தோம் என்ற நல்லாட்சி சாதனை உலகுக்கும் வருகின்ற மார்ச் மாத ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடருக்கும் கூற என்று சிங்களத்துக்கு...

3) இது யாரால் செய்யப்படுகின்றது, எதற்காக என்று எந்த நெளிவு சுழிவுகளையும் நோக்காது கிடைத்த சந்தர்ப்பத்தை மிக அழகாக பயன்படுத்தி தமது தமிழர் தாயகத்தின் விடியலுக்காக களமாடி வீழ்ந்த மாவீரச் செல்வங்களை முழு மனதோடு நன்றியுடன் நினைவேந்துதல் செய்து 2009க்கு முன்பிருந்த ஒரு பொழுதை வரலாற்றில் மீண்டும் பதிந்து சென்ற எம்மக்கள் சிங்களத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

ஆனாலும் இந்த நிகழ்வுகளை வெறுமனே சிங்களம் அந்த பொழுதுகளில் கைகட்டி வேடிக்கை பாத்து கொண்டிருக்கவில்லை என்பதையும் நாம் புரிய வேண்டும். என்னதான் கூட்டமைப்பு பா.உ க்களின் கைத்தடிகள் போலியாக இதில் ஈடுபட்டாலும்கூட, கலந்துகொண்ட பொதுமக்களில் பலரின் உணர்வுகளை அந்த இடத்தில் அவர்களின் உடல்மொழியை சிங்கள புலனாய்வு கவனித்தே இருக்கும். இன்னும் உறங்காமல் இருக்கும் உணர்வுடன் வெளியில் இருக்கும் ஒரு சிலரை அடையாளம்காண சிங்களம் பெரு முயற்சி எடுத்தே இருக்கும்.

சிங்களம் என்ன நினைத்து இதனை அனுமதித்ததோ அதனை அவர்களுக்கே எதிரான ஒரு உணர்வு அலையாக மாற்றிய எம் தேச மக்களும் அவர்களுக்கு எப்போதும் இலட்சியதுணையாக இருக்கும் புலம்பெயர், தமிழக உறவுகளும் ஏற்றிய சிறுசிறு தீபங்களின் முன்னால் சிங்களம் முகமிழந்து நிற்கிறது.

பி.கு: இந்த மாவீரர் நிகழ்வுகள் ஏன் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவில்லை. வழமையாக நான்கு பேருடன் தீபம் ஏற்றும் சிவாஜிலிங்கம் இம்முறை ஏன் அவரது இடத்துக்கு அருகிலான எள்ளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் தீபம் ஏற்ற முயற்சிக்கவில்லை. சரி நல்லூரில் நாலு பேருடன் ஏற்றிவிட்டு மாவீரருக்கும் சகோதர படுகொலையானவர்களுக்கும் என்று கூற வேண்டிய அரசியல் நிர்பந்தம் சிவாஜிலிங்கத்துக்கு ஏற்பட்டது ஏன்..?

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
ஞாயிறு April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.