ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் பதவிக்கு பெண்

வியாழன் மே 19, 2016

ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) இது ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளுக்கு கடனுதவி அளிக்கும் வகையில் இங்குள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி 1966-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கியில் உலகின் முக்கிய நாடுகளுக்கு பங்குகளும், அந்த பங்குகளுக்கு ஏற்ப ஓட்டுரிமையும் உண்டு.

இப்படி ஓட்டுரிமை பெற்ற இவ்வங்கியின் கவர்னர்கள் 12 செயல் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பர். இந்த 12 இயக்குனர்களில் எட்டுபேர் ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலையொட்டிய நாடுகளால் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் இவ்வங்கியின் முழுநேர இயக்குனர்களாக மணிலாவில் உள்ள தலைமையகத்தில் தங்களது பணிகளை ஆற்றுவார்கள்.

ஆசிய வங்கியின் தற்போதைய தலைவராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகேகிகோ நகாவோ பதவி வகித்து வருகிறார். அவருக்குகீழ் இவ்வங்கியில் பங்குவகித்துவரும் நாடுகளை சேர்ந்த ஒருவர் ஆசிய வங்கியின் இயக்குனர்கள் குழுமத்தில் இடம்பெறுவது வழக்கத்தில் உள்ளது.
 
அவ்வகையில், அமெரிக்காவின் சார்பில் ஆசிய வங்கியின் இயக்குனர்கள் குழுமத்தில் இடம்பெற்றுள்ள ராபர்ட் ஓர் என்பவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

இதையடுத்து, இந்த பதவிக்கு அமெரிக்காவின் அயோவா மாநில சட்டசபை முன்னாள் உறுப்பினரான சுவாதி தன்டேக்கரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரைக்கு அமெரிக்க பாராளுமன்ற பொதுச்சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பிறந்த சுவாதி, நாக்பூர், மும்பை நகரங்களில் படித்து பட்டதாரியானவர். அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுவாதி கடந்த 1973-ம் ஆண்டு அவருடன் அமெரிக்காவில் உள்ள அயோவா மாநிலத்தில் குடியேறினார்.

இங்குள்ள லின்மார் மாவட்டத்தின் கல்வித்துறை இயக்குனரக குழுமம் அயோவா மேம்பாட்டு குழுமம் ஆகியவற்றில் திறம்பட செயலாற்றிய இவர் 2003-ம் ஆண்டில் அயோவா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் அமெரிக்க மாநில சட்டசபை ஒன்றில் முதன்முதலாக இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர் என்ற சாதனையை உருவாக்கினார். 

தொடர்ந்து, சட்டசபை மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் அயோவா மாநில எம்.பி. பதவிக்கு போட்டியிட முயன்று அதற்கான ஆதரவை திரட்டும் தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், ஆசிய வங்கியின் இயக்குனர் பதவிக்கு இவரது பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த நவம்பர் மாதம் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரைக்கு அமெரிக்க பாராளுமன்ற பொதுச்சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளதால் ஒருநாட்டின் தூதர் பதவி அளவுக்கு முக்கியத்துவமும் இணையுமான இந்த பதவியை சுவாதி தன்டேக்கர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.