ஆட்கடத்தலை தடுக்க திமோர் கடலில் ஆஸ்திரேலியா- இந்தோனேசியா படையினர் கூட்டு ரோந்து !

Saturday June 02, 2018

 ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே உள்ள திமோர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பு, மற்றும பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் ஆட்கடத்தல் உள்ளிட்ட செயல்களைக்  கண்காணிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில ஈடுபட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய எல்லைப் படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, இந்தோனேசிய கடல் மற்றும் மீன்பிடி விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் உள்ளடங்கிய முத்தரப்பு ரோந்து நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகின்றது. ஆப்ரேஷன் கன்னெட் (Operation Gannet) என அழைக்கப்படும் இந்நடவடிக்கையில் ரோந்து படகுகள்/ கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

அதே போல், பப்பு நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அமைந்திருக்கும் டோரஸ் ஜலசந்தி பகுதியிலும் சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக ஆஸ்திரேலியா எல்லையோரப் படை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  இது வழியாக பயணிக்கும் அனைத்து பயணிகளையும் எல்லையோரப் படை பரிசோதனைக்கு உட்படுத்துகின்றது. கடந்தாண்டு டோரஸ் ஜலசந்தி அருகே அமைந்திருக்கும் சாய்பாய் தீவிலிருந்து 6 சீனர்கள் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு வந்ததாக கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்தியா, இலங்கை, மியான்மர், வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு செல்ல முயற்சிக்கும் அகதிகள்/ தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு, இந்தோனேசியா ஓர் இணைப்பு நாடாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய இடையே உள்ள திமோர் கடல் பகுதி வழியாக ஆட்கடத்தல் சம்பவங்கள் நிகழலாம் என ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 

2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை கையாண்டு வரும் ஆஸ்திரேலிய அரசு படகு வழியே வருபவர்களை சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருகின்றது. அந்த வகையில் இதுவரை 30க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த 700க்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.