ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக இத்தாலியில் 6 தமிழர்கள் கைது!

Saturday June 09, 2018

போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் அலோசியஸ் அல்போன்ஸ், எட்வர்ட் செல்வராசா ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

சட்டவிரோதமாக இத்தாலியில் நுழைவதற்காக 28 ஆயிரம் யூரோ வரை செலுத்தும் நபர்களும் உள்ளனர், போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையில் இருந்து இத்தாலிக்கு நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பொலிஸ் நடமாடும் குழுவினால் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக பலேர்மோ நீதிமன்றத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர்களின் புகைப்படங்களை இத்தாலி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.