ஆட்கடத்தல் ஈடுபட்டதாக ஆப்கானிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Tuesday March 13, 2018

படகு வழியாக 200 க்கும் மேற்பட்ட அகதிகள்  ஆஸ்திரேலியாவுக்கு  சென்றடைய ஏற்பாடு செய்த சயித் அபாஸ் என்ற ஆப்கானிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மாவட்ட நீதிமன்றம் இத்தண்டனையை அவருக்கு வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த 2009 மற்றும் 2011 யில் மூன்று படகுகள் வழியாக 200க்கும் மேற்பட்ட அகதிகள்  இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர். இந்த அகதிகளிடமிருந்து இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய்(இந்திய மதிப்பில்) வரை  பெற்றுக்கொண்டு சயித் அபாஸ் இந்த பயண ஏற்பாட்டைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இந்த குற்றத்திற்காக இந்தோனேசியாவில் சிறைப்பட்டுத்தப்பட்ட அவர், 2015யில் ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

நீதிமன்றத்திற்கு சயித் அப்பாஸ் எழுதிய கடிதத்தில், “ஆப்கானிஸ்தானில் வேலைச் செய்வதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை, தாலிபானின் அச்சுறுத்தலால் நான் எனது நாட்டைவிட்ட வெளியேற நேர்ந்தது. எனது சூழ்நிலை என்னை மிக அதிகமாகவே தண்டித்துவிட்டது” எனக் கூறியிருக்கிறார். இந்தோனேசியாவில் அவர் சிறைப்படுத்தப்பட்டிருந்த பொழுது துன்புறுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் பாதிகப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பு வாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“அபாஸ செய்த குற்றங்கள் ஆஸ்திரேலிய இறையாண்மையை மீறிய நடவடிக்கையாகும்.அத்துடன் அவர் இந்த பயண ஏற்பாட்டின் மூலம் பொருளாதார பலன் அடைந்திருக்கிறார்” என்ற நீதிபதி ஆண்ட்ரூ ஸ்டாவிரனோ, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறார்.