ஆட்டம் காண வைக்கும் அப்ப விருந்துகள் - பிலாவடிமூலைப் பெருமான்

Thursday November 01, 2018

வணக்கம் பிள்ளையள், இப்ப கொஞ்ச நாளாக உங்களோடை நாலு சங்கதி கதைக்காட்டி எனக்கு என்னவோ வேதாளத்தின் கேள்விக்குப் பதில் சொல்லாட்டித் தலை வெடிச்சுப் போகிற நிலையில் இருந்த விக்கிரமாதித்தனின் நிலை தான் பாருங்கோ. கடைசியாக உங்களோடை கூரேயைப் பற்றி நான் நாலு வார்த்தை கதைச்சாப் பிறகு கன சங்கதியள் நடந்து போச்சுது. இதில் எதில் தொடங்கிறது என்பதுதான் பிரச்சினையே.
 

சரி, போன கிழமை ஸ்காபுறோவிலை நடந்த கல்யாண வீடொன்றில் ஐஸ் கிரீமுக்குப் பதிலாக அப்பம் கொடுத்த கதைக்கு வாறன். வெள்ளை அப்பம், பால் அப்பம், முட்டை அப்பம் என்று அசத்திப் போட்டாங்கள்.
Hopper

எனக்கு வகை வகையாக அப்பத்தைக் கண்டவுடன் அந்த நாட்களில் கண்டியில் நான் வேலை செய்யேக்குள்ளை லொக்கு அன்ரியின் கடையில் டிங்கிரி நோனாவின் கையால் அப்பம் வாங்கித் தின்றது தான் ஞாபகத்துக்கு வந்தது. நான் பேராதனையில் படிச்சு முடிச்சுப் போட்டு கண்டியில் இருக்கிற தபால் கந்தோர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தனான். 
 

இரவில் நான் சாப்பிடுகிறது லொக்கு அன்ரியின் கடைசியிலை தான். பக்கத்திலை வேறை கடையள் இருந்தாலும், லொக்கு அன்ரியின் மகள் டிங்கிரி நோனாவை சைட் அடிச்சுக் கொண்டு சாப்பிடுகிறதிலை எனக்கு ஒரு அலாதிப் பிரியம் பாருங்கோ. நான் இப்பிடிச் சொல்கிறேன் என்று நீங்கள் என்னைப் பற்றி அப்பிடி இப்பிடி எல்லாம் நினைக்கக்கூடாது. நான் சைட் மட்டும் தான் அடிச்சான். அதுக்கு அங்காலை போயிருந்தால் என்ரை அப்பு என்ரை முதுகைக் கருக்கல் மட்டையால் தான் பிளந்திருக்கும். 
 

கண்டிக்கு நான் வெளிக்கிடேக்குள்ளையே ஆச்சி சொன்னவா: ‘மோனே, சிங்கள நாட்டிலை ஒரு சோலியும் இல்லாமல் படிச்சு முடிச்சிட்டாய். இப்ப திரும்பவும் சிங்கள நாட்டுக்கு வேலைக்குப் போறாய். அங்கினேக்கை ஆரும் சிங்களத்தியைப் பிடிச்சுக் கொண்டு இஞ்ச வந்து போடாதை.’ ஆச்சி அப்பிடிச் சொல்லி முடிச்சதும் பார்த்தன், என்ரை அப்பு பக்கத்து வீட்டு நாய்க்கு பச்சை மட்டையால் அடிச்சுக் கொண்டிருந்தவர். சும்மா அடிச்சாப் பரவாயில்லை. ‘நாயே, உன்னை ஒழுங்காய் இருக்கச் சொன்னால் உனக்கு கொழுப்பு என்ன? அடுத்த முறை சேட்டை விட்டுப் பார் உன்ரை முதுகைக் கருக்கல் மட்டையால் தான் பிளப்பன்’ என்றவர்.
 

அவர் நாயை அடிக்கிற சாக்கில் என்னைத் தான் வெருட்டினவர். பிறகெப்படி நான் டிங்கிரி நோனாவிடம் என்ரை இலவைச் சொல்லுறது?
 

ஒரு நாள் லொக்கு அன்ரியின் கடைக்குள் நான் போக மனிசு ஏதோ சிங்களத்தில் ஒப்பாரி வைச்சுக் கொண்டிருந்தவா. ‘என்ன லொக்கு அன்ரி அழுகிறியள்? ஏதாவது பிரச்சினையோ?’ என்று நான் கேட்க, மனுசி மூக்கைச் சிந்திக் கொண்டே சொல்லிச்சுது: ‘அப்புகாமியின் வீட்டை இருந்த அப்பச் சேனாவோடை டிங்கிரி நோனா ஓடிப் போய் விட்டாள்’ என்று. மனுசி அப்பிடிச் சொன்னதும் நான் தலையில் அடிச்சுக் கொண்டு அப்படியே இலவு காத்த கிளி மாதிரி திகைச்சுப் போய் நின்று விட்டேன். 
 

உதென்ன சம்பந்தம் இல்லாமல் கிழடு அறளை பெயர்ந்து கதைக்குது என்று நீங்கள் குசுகுசுக்கிறது எனக்கு விளங்குது. விசயம் என்னவென்றால் பாருங்கோ, எனக்கு உந்த மைத்திரிபால சிறீசேனாவைப் பார்த்தால், அடிக்கடி அப்பச் சேனா தான் ஞாபகத்துக்கு வருகிறவர். அன்றைக்கு ஒரு நாள் தான் பேப்பர் ஒன்றில் பார்த்தன், எங்கடை லொக்கு அன்ரியை அச்சு அசலுக்கு செய்து வைச்ச மாதிரித்தான் சிறீசேனாவின் மனுசி இருந்தவா. ஒரு வேளை நான் சைட் அடிச்ச டிங்கிரி நோனாதான் சிறீசேனாவின் மனுசியோ என்று எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருந்தது. 
 

டிங்கிரி நோனாவை இழுத்துக் கொண்டு ஓடின அப்பச் சேனா, லொக்கு அன்ரியிட்டை அப்பம் வாங்கித் தின்று போட்டுத் தான் ஓடிப் போனவராம்.
 

உந்த மைத்திரிபால சிறீசேனாவும் நாலு வருசத்துக்கு முதல் மகிந்த ராஜபக்சவிட்டை ருசி ருசியாய் அப்பம் வாங்கித் தின்று போட்டுத் தானே ரணில் விக்கிரமசிங்காவின் பக்கம் பாய்ந்து போய் எலெக்சன் கேட்டு மகிந்தாவுக்கு ஆப்பு வைச்சவர். ஆப்பென்றால் அது சும்மா ஆப்பில்லை பாருங்கோ. அப்பத்தை வைச்சுச் செருகின பெரிய ஆப்பெல்லே அது. 
 

இப்ப ரணில் மாத்தையாவிற்கு ஆள் ஆப்பு வைச்சிட்டார். இரண்டு வருசத்துக்கு முதலே கொழும்பில் இருக்கிற என்ரை கூட்டாளி ஒருத்தன் சொன்னவன், ‘நீ இருந்து பார் பெருமான், இன்னும் கொஞ்ச நாளில் மகிந்தவும், மைத்திரியும் கூட்டுச் சேருவாங்கள்’ என்று. நான் முதலில் அவனுக்கு அறளை பெயர்ந்திட்டுது என்று தான் நினைச்சனான்.
Ranil

போன வெள்ளிக்கிழமை செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் திகைச்சுத் போனேன். காலையில் ரணில் மாத்தையாவோடை அப்பம் சாப்பிட்ட சிறீசேனா, பின்னேரம் போலை மகிந்த ராஜபக்சவைக் கூப்பிட்டு அவருக்கு அப்பம் கொடுத்து ஆளைப் பிரதம மந்திரி ஆக்கிப் போட்டாராம். 
 

இதில் பெரிய பகிடி என்னவென்றால் பாருங்கோ, தன்னைக் கொல்லுறதுக்கு றோ திட்டம் தீட்டுது என்று சிறீசேனா அன்றைக்குச் சொன்னவர். இப்படித்தான் கொஞ்சக் காலத்துக்கு முதல் மகிந்தாவும் சொன்னவர். தன்னைப் பதவியில் இருந்து தூக்கிப் போட்டு சிறீசேனாவை அதிபர் ஆக்கியதே றோ தான் என்று. இப்ப என்னவென்றால் தன்ரை உயிருக்கு றோவால் அச்சுறுத்தல் என்று சொல்லிப் போட்டு, தான் முதலில் ஆப்பு வைச்ச மகிந்தாவையே சிறீசேனா பிரதமர் ஆக்கீட்டார்.
 

றோவால் தன்ரை உயிருக்கு அச்சுறுத்தல் என்று போன கிழமை சிறீசேனா கொழும்பில் சொல்லி முடிக்கவில்லை. எங்கடை ரணில் மாத்தையா டில்லிக்கு உடனேயே ஓடோடிப் போய் நரேந்திர மோடியோடு உப்பரிகையில் குந்தியிருந்து ஒய்யாரக் கொய்யகம் செய்தவர். 
 

ஆனாலும் என்ன? அங்காலை சீனா இருக்கேக்குள்ளை இந்தியாவின்ரை பருப்பு வேகுமே? அதுதான் ரணில் மாத்தையாவுக்கு சிறீசேனா ஆப்பு வைச்சிட்டார். இனி கொழும்பில் ஒரே திருவிழா தான் பாருங்கோ.
 

உதுக்குள்ளை இன்னொரு பூதமும் கிளம்பியிருக்குது. சிறீசேனாவையும், கோத்தபாயவையும் கொலை செய்யிறதுக்கான சதியில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைமை அதிகாரி நாலக்க டீ சில்வா ஈடுபட்டார் என்று கொஞ்ச நாளைக்கு முன்னர் பெரிய குண்டொன்றைத் தூக்கிப் போட்ட ஊழல் எதிர்ப்புப் பிரிவுப் பணிப்பாளர் நமால் குமார சொல்லியிருக்கிறாராம், நாலக்க டீ சில்வாவின் பின்னணியில் சரத் பொன்சேகா தான் இயங்குகிறாராம். நமால் குமார இப்ப போட்டிருக்கிறது ஆப்கானிஸ்தானில் கொஞ்ச நாளைக்கு முதல் டொனால் ரிறம்ப் போட்ட இராட்சதக் குண்டை விட பெரிய குண்டு போலை கிடக்குது. எல்லாம் சும்மா அதிருது.
 

ஆக ரணில் மாத்தையாவுக்கு மட்டுமில்லை: போகிற போக்கைப் பார்த்தால் சரத் பொன்சேகாவுக்கும் சிறீசேனா அப்பம் கொடுப்பார் போல் இருக்குது.
 

உதுக்குள்ளை எங்கடை கூத்தமைப்புக்காரர்... மன்னிக்க வேணும், நான் எங்கடை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரரைச் சொன்னனான். கொழும்பில் எல்லாம் ஆட்டம் காணுது, எங்கடை சம்பந்தன் ஐயாவும், சுமந்திரன் மாத்தையாவும் இனி என்ன செய்யப் போகீனம் என்றது தான் அடுத்த கேள்வி. சம்பந்தர் ஐயாவுக்கு இப்ப இரண்டு கவலை பாருங்கோ.
 

ஒரு பக்கம் மைத்திரியும், மகிந்தரும் ஒன்று சேர்ந்ததால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அம்பேலாகி விட்டது. இனி பல்லை இளிச்சுக் கொண்டு சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் திரிய வேண்டியது தான். 
Wicki-Sampanthan

இது காணாது என்று சம்பந்தன் ஐயாவுக்கு விக்னேஸ்வரன் ஐயாவும் எல்லே அப்பம் கொடுத்திட்டார். கூத்தமைப்பில் இருந்து பிரிஞ்சு போய் தமிழ் மக்கள் கூட்டணி என்று ஒரு கட்சியை மனுசன் தொடங்கி விட்டார். இதனால் தன்ரை எதிர்கட்சித் தலைவர் பதவி மட்டுமில்லை, கூத்தமைப்பின் கதிரையள் எல்லாமே ஆடப் போகுது என்ற கவலையில் சம்பந்தன் ஐயா இருக்கிறாராம். ஆரிட்டைச் சொல்லி அழ என்று மாவையிட்டையும், சுமந்திரனிட்டையும் ஆள் சொல்லி அழுதவராம்.
 

சரி, இப்பிடியே நான் கதைச்சுக் கொண்டிருந்தால், பிலாவடி மூலைப் பக்கம் நேரத்துக்குப் போய் சேர முடியாது. வாறன் பிள்ளையள். அடுத்த முறை இன்னும் பல சங்கதியளோடை உங்களை வந்து சந்திக்கின்றேன்.
 

அதுக்குள்ளை ஆர் ஆருக்கு அப்பம் கொடுக்கிறாங்களோ!