ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்!

Sunday May 06, 2018

நீட் தேர்வெழுத மகனை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம்  ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனை என்றால் ஏதோ வெளிநாட்டில் இருந்து திருட்டுத்தனமாக உள்ளே வந்தவர்களை சோதனை செய்வது போல அதிகாரிகள் நடத்தியுள்ளனர். 

தலைமுடியை கூட கலைத்து உடல் முழுவதும் பரிசோதனை நடத்திய பின்னரே மாணவிகள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கடும் ஜலதோஷத்தால் அவதிப்பட்ட மாணவியை கைக்குட்டை கூட எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. வேண்டுமென்றால் ஆடையில் சளியை துடைத்துக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில்வேறு கூறியுள்ளனர்.

தேர்வு மைய அதிகாரிகளின் இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே கடும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் எல்லை மீறுகின்றனர் என அவர்கள் ஆத்திரம் பொங்க கூறியுள்ளனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துரைபூண்டியை சேர்ந்த மகாலிங்கம் என்ற மாணவர் நீட் தேர்வெழுத கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார். அங்கு கிருஷ்ண சாமி மாரடைப்பால் திடீரென மரணமடைந்துவிட்டார்.

தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகாலிங்கம் தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “தமிழக மாணவர்களை நீட் தேர்வெழுத வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் விளைவாக, எர்ணாகுளம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நீட் கொடுமையால் மருத்துவம் படிக்க முடியாமல்போன மாணவி அனிதா உயிரை சென்ற ஆண்டு பறிகொடுத்தோம். மகனுக்கு துணையாகச் சென்ற தந்தை கிருஷ்ணசாமியை மன உளைச்சலால் இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம். நீட் தேர்வால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டு தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.