ஆபத்தான நிலையில் ரோஹிங்கியா அகதிகள்!

Friday June 08, 2018

வங்கதேசத்தில் மழை காலம் நெருங்கியுள்ள நிலையில், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் ஆபத்தான நிலையில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, காலரா போன்ற நீரில் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் சூழலை அகதிகள் எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலைக் கொண்டுள்ளன. 

“மழை மற்றும் வெள்ளப் பாதிப்பில் பெரும் நெருக்கடியை சந்திக்கும் மாதங்களாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் இருக்கின்றன. காக்ஸ் பஜாரில் அமைந்திருக்கும் முகாம்களில் உள்ள 2 லட்சம் அகதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கின்றனர். இதில் 25,000 அகதிகள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர்” என இன்டர் செக்டர் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.   

இந்த  நிலை பற்றி விளக்கியுள்ள நார்வே அகதி கவுன்சிலின் வங்கதேச இயக்குநர் ஸ்டியோபைனின் நிக், “மழை காலத்தின் தொடக்கத்திலேயே பல நிலச்சரிவுகள் நடந்துள்ளன. வெள்ளப்பெருக்கால் கழிவு நீர் பொங்கி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலரா, டைபாட், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே, இட நெருக்கடியை சந்தித்து வரும் வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் சிக்கல் மேலும் நெருக்கடியினை உருவாக்கியுள்ளது. அதே சமயம், வங்கதேச அகதிகள் நல ஆணையத்தின் உதவியுடன் இதுவரை 18,885 அகதிகள் கடும் ஆபத்தான இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ரோஹிங்கியா அகதிகளில் பெரும் பகுதியானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் அவர்களை காப்பதில் மனித உரிமை அமைப்புகள் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளன. 

கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட  வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ எனத் தெரிவித்திருந்தது.