ஆப்கானிஸ்தானில் வாக்காளர் பதிவு மையத்தில் குண்டு வெடிப்பு - 12 பேர் பலி!

ஞாயிறு மே 06, 2018

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் வாக்காளர் பதிவு மையத்தில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் திகதி முதல் புதிய வாக்காளர்களுக்கான சேர்க்கை முகாம் நாடு முழுவதும் நடைபெற்று  வருகிறது. இந்த வாக்காளர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் இதுவரை 7 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். 

கடந்த மாதம் காபுல் நகரில் வாக்காளர் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.  இந்நிலையில் கோஸ்ட் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று தற்காலிக வாக்காளர் சேர்ப்பு முகாம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது அங்கு வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஒரு பெண் உட்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 

படுகாயமடைந்த 30 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.