ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த மத்திய- மாநில அரசுகள் சதி!

Wednesday December 13, 2017

ஆர்.கே. நகரில் தி.மு.க. வெற்றி உறுதி என்பதால் தேர்தலை நிறுத்த மத்திய- மாநில அரசுகள் சதி செய்வதாக திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. விடுவிக்கப்பட்ட 3 பேர் விவகாரத்தை அரசே மேல் முறையீடு செய்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளித்து அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆளும் கட்சி தோல்வி அடைந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தேர்தலை நிறுத்த மத்திய- மாநில அரசுகள் முயன்று வருகின்றன.

என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. குற்றம் செய்திருந்தால் குண்டர் சட்டத்தில் நட வடிக்கை எடுக்கட்டும்.

ஒக்கி புயலால் பாதிப்படைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசிடம் ரூ. 1,840 கோடி கேட்டுள்ளது போல் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் பார்வையிடலாம். ஆனால் அரசு அதிகாரிகளுடன் ஆலோசிப்பது போன்ற விவகாரங்களில் தலையிடக் கூடாது. இந்த வி‌ஷயத்தில் முதல்வர் மவுனம் காக்காமல் மத்திய அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.