ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள யாழ் வேலையற்ற பட்டதாரிகள்!

Saturday September 22, 2018

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று சனிக்கிழமை முற்பகல்-10 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் முறையற்ற வகையில் பட்டதாரிகளுக்கான அரச நியமனங்களை வழங்கி வேலையற்ற பட்டதாரிகளைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை அவர்கள் வெளியேறிய ஆண்டடிப்படையில் வழங்காது புள்ளியடிப்படையில் வழங்கி வருகிறது. இதன் மூலம் வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளான நாம் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளோம்.

இது தொடர்பில் நாம் இனியும் வாய்மூடி மெளனம் காப்பதால் பலன் எதுவுமில்லை. எனவே, மீதமுள்ள நியமனங்களை சரியான ஒழுங்கு முறையில் வழங்க வலியுறுத்தியும், மாகாண அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களையும் நிரப்ப ஒன்றிணைவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.