ஆறுகடக்கும் மட்டும்தான்...! - கந்தரதன்

புதன் மே 11, 2016

இன்று முள்ளிவாய்க்கால் வலிகளைச் சுமந்து 7 வருடங்களை அண்மிக்கும் நிலையில் உள்ளோம். ஆனால், புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் பலர் சிறீலங்காவின் வன்கொடுமைகளை மறந்தவர்களாக இருப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது.

புலம்பெயர் தேசம் ஒன்றிற்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்னர் வந்து சேர்ந்த இளைஞர் ஒருவர், முள்ளிவாய்க்கால் அவலங்களையயல்லாம் வர்ணித்து அதன் புகைப்படங்களையயல்லாம் ஆதாரங்களாய் சமர்ப்பித்து வதிவிட உரிமைபெற்று, நல்ல தொழில் வாய்ப்புடன் இருக்கும் நிலையில், நண்பர் ஒருவர் அவரிடம் கேட்கின்றார், இம்முறை முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு வருவீரோ என்று. அதற்கு அந்த இளைஞர் அது என்ன திகதியில் வருகின்றதென்று கேட்கின்றார். இதனைக் கேட்ட அந்த நண்பர் அதிர்ந்தே விட்டார். எல்லாம் வதிவிட உரிமை பெறுவதற்கு மட்டும்தான் மாவீரர்களும், முள்ளிவாய்க்கால் நினைவும் - கிடைத்த பின்னர் சொல்லத் தேவையில்லை.

இவ்வாறுதான் புலம்பெயர் நாடொன்றில் வேலைபார்க்கும் மற்றொரு இளைஞன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அவருடன் வேலைபார்க்கும் மற்றொரு இளைஞர் வரும்படி அழைக்கின்றார். ஆனால், அவரோ வேலையைக் காரணம் காட்டுகின்றார். குறித்த இளைஞர் புலம்பெயர் நாட்டில் வெளியாகிய சினிமாவிற்கு, தனது விடுமுறையை மாற்றிவிட்டு முன்வரிசையில் நிற்கின்றார். இதுதான் இன்றைய தமிழ் இளைஞர்களின் நிலை. இதற்கு நல்லதொரு பழமொழிதான் நினைவிற்கு வருகின்றது. ஆறு கடக்கும் மட்டும் தான் அண்ணன்தம்பி, ஆற்றைக் கடந்தபின் நீ யாரோ, நான் யாரோ...? என்ற நிலைதான் இன்று உள்ளது. இது புலம்பெயர் சமூகத்தில் பலருக்குப் பொருந்தும்.

பிஞ்சுகளையும் பூக்களையும் சிங்களத்தின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகக் கொடுத்தோம். நாம் ஊரை விட்டு நாட்டைவிட்டு ஏதிலிகளாக ஏன் ஓடிவந்தோம்? ஒருகணம் சிந்தியுங்கள் அந்த உண்மை புரியும். இவற்றையயல்லாம் மறந்து எப்படி வாழமுடிகின்றது. புலம்பெயர் தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு இருக்கும் தேச உணர்வு கூட, எல்லாவற்றையும் கண்ணால் கண்டு அனுபவித்து வந்த எம்மில் பலருக்கு இல்லாமல் போனது ஏனோ? ஆடம்பரவாழ்வு கண்ணை மறைக்கின்றது. இவை நிலையில்லை என்பதை இவர்கள் உணரத் தவறியுள்ளனர்.

இதேவேளை, தாயகத்திலும் தமிழ் சிறார்களை தமிழ் உணர்வில்லாதவர்களாக மாற்றும் நிலையில் சிறீலங்கா இனவாதிகள் இறங்கியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவர்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பெளத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேனவின் வழிநடத்தலில் இந்தச் சிறுவர்கள், ஓராண்டுக்கு முன்னர் பெளத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பெளத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி பெற்றுள்ள இந்தச் சிறுவர்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பெளத்த போதனைகளை வழங்குவதற்காக தயார்படுத்தவுள்ளதாக பெந்திவெவ தியசேன கூறியுள்ளார்.

இந்நிலையில், வன்னிப்பிரதேசங்களில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவின் கண்காணிப்பிலுள்ள முன்பள்ளிகளில் கல்விகற்கும் மாணவர்கள் சி.எஸ்.டி இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடையை அணிந்து முன் பள்ளிகளில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கல்விகற்கும் மாணவர்களை இராணுவ படைப்பிரிவில் இணைக்க முயற்சிக்கும் முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வன்னியில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளிப்படையாக இருந்த இராணுவ மயமாக்கல் தற்போதைய மைத்திரி நல்லாட்சியில் மிகவும் இரகசியமான முறையில் நன்கு திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வருகின்றது. வன்னியில் இராணுவத்திற்காக பொதுமக்களது உறுதிக் காணி அபகரிக்கும் நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தொடர்கின்றது. மக்களது வசிப்பிடங்களில் காணப்படும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வேலையற்று இருந்த தமிழ் இளைஞர், யுவதிகளை சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு எனக்கூறி இணைத்துக்கொண்ட, இலங்கை இராணுவப் படைப் பிரிவு அவர்களை விவசாயப் பண்ணைகள், பாலர் பாடசாலைகள் எனப் பல்வேறுபட்ட நிறுவனங்களில் இராணுவத் தலைமையின் கீழ் இராணுவக் கண்காணிப்பு, மேற்பார்வையின் அடிப்படையில் பணிக்கமர்த்தியுள்ளார்கள்.

இதில் சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவு முன்பள்ளி ஆசிரியைகள் கற்பிக்கும் முன்பள்ளிகளை இராணுவம் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதுடன் அங்கு எப்படியான செயற்பாடுகள் இடம்பெறவேண்டும் என்பதையும் திட்டமிட்டு வகுத்து வழங்கி வருகிறது. அங்கு கற்கும் முன்பள்ளிச் சிறுவர்களுக்கான சீருடைகளையும் தமது இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகளாக தற்போது மாற்றி வழங்கியுள்ளார்கள்.

மேலும் இராணுவத்தினது சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவு (சி.எஸ்.டி) முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்கள் இராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள சீருடைகளைத் தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீருடைக்கான பணமாக 600 ரூபாயினை முன்பள்ளி மாணவர்களது பெற்றோர் செலுத்தி (சி.எஸ்.டி) இராணுவச் சீருடையை பெற்று மாணவச் சிறார்களுக்கு அணிவித்து முன் பள்ளிகளுக்கு அனுப்புமாறு சிவில் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகள் வற்புறுத்தி வருவதாகப் பெற்றோரால் கூறப்படுகின்றது.

தமது சிறுவர்களை முன்பள்ளிகளில் கல்வி கற்கத்தான் அனுப்பியதாகவும் சிறுவர்களை இராணுவப் படைப்பிரிவில் இணைப்பதற்கு அனுப்பவில்லை எனவும் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயத்தில் முன்பள்ளிகளை மாகாணக் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவேன் என நீண்ட காலமாகக் கூறிவரும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா இது தொடர்பில் விரைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து முன்பள்ளிச் சிறார்களை இராணுவப் படைப்பிரிவில் இணைப்பதிலிருந்து காப்பாற்றுமாறு பெற்றோர்களால் கோரப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் போராளிகள் மீதான கைது நடவடிக்கைகள் மற்றும் வெள்ளைவான் கடத்தலை கண்டித்து காணாமல் போனவர்களை தேடியறியும் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது பெளத்தபிக்கு தலைமையில் அங்கு வந்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. காணாமல்போனவர்களை தேடியறியும் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அன்றைய தினம் காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதித் தருணத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

மீண்டும் வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்கியுள்ளதுடன், முன்னாள் போராளிகள் மீதான கைதுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வது நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி காணாமல்போனவர்களை கண்டறியும் குடும்ப ஒன்றியத்தினர் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட காணாமல் போனோரின் உறவுகள் கலந்துகொண்டு, வெள்ளைவான் கடத்தல்வேண்டாம், நல்லிணக்கத்தை முறியடிக்கும் வெள்ளைவான் கடத்தலை நிறுத்து எனும் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தையடுத்து காவல்துறையினரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தினை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இவர்கள் ஊர்வலமாக செல்லும்போது துண்டுப்பிரசுரங்களை வீதியால் சென்றவர்களுக்கும் கொடுத்துள்ளனர். இதனை அவதானித்த பெளத்த பிக்கு ஒருவர் சிலருடன் இணைந்து வந்து மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு முன்னால் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். நீங்கள் இனவாதத்தை தூண்டுகிறீர்கள், தாய்மாரை ஏமாற்றி இந்த ஆர்ப்பாட்டங்களை செய்கிறீர்கள் என கூறியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை நிலத்தில் தள்ளிவிட்டு தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன் சிறீலங்கா காவல்துறையினர் தலையிட்டு அக்குழுவினரை அங்கிருந்து அகற்றினர். இதுதான் தாயகத்தில் இன்றுள்ள நிலை. சிறீலங்கா இனவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவிற்கொள்வதற்கும் சிறீலங்கா இனவாதிகளால் எமது மக்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளுக்கு சர்வதேசத்தின் முன் நீதிவேண்டியும் வரும் மே 18 அன்று அலையயனத் திரண்டு கோசம் எழுப்புவோம் வாரீர்!

சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!!

சூறையாடல்கள் தொடரும்

நன்றி: ஈழமுரசு